கோவை நீதிமன்ற வளாகம் எப்போதும் போல இன்று காலை பரபரப்பாக இயங்க தொடங்கியது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முதலாவது குற்றவியல் நீதிமன்றம் அருகே ஒரு பெண் மீது ஆண் ஆசிட் ஊற்றினார்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், பெண்ணை பாதிப்பில் இருந்து தடுக்க முயன்ற வழக்கறிஞர் உள்ளிட்ட சிலருக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த வழக்கறிஞர்களே அந்த நபரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவனையில் அனுமதித்தனர். போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிவக்குமார் என்ற ஆண் தன் மனைவி மீது ஆசிட் வீசியது தெரியவந்துள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கு விசாணைக்கு தான் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். நீதிமன்றத்தில் மனைவியின் அருகே அமர்ந்திருந்த கணவன், தண்ணீர் பாட்டிலில் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து மனைவி மீது தலை முதல் கால் வரை ஊற்றியுள்ளார்.
சிவக்குமாரை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் செய்தியாளர்களிடம், “கோவை பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்தோம். ஆசிட் வீச்சால் 80 சதவிகித பாதிப்புடன் அவர் கவலைக்கிடமாக உள்ளார்.
கணவருக்கு தன் மனைவி மீது சந்தேகம் இருந்ததாக முதல் கட்ட விசாணையில் தெரியவந்துள்ளது. நீதிமன்றத்தில் வாட்டர் பாட்டிலில் ஆசிட்டை கொண்டு வந்ததால் கண்டறிய முடியவில்லை.” என்று கூறியுள்ளார்.
முன்னதாக சிவக்குமாரை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி அழைத்து செல்ல முயற்சித்தனர். அப்போது வழக்கறிஞர்கள் சிவக்குமாரை தாக்க முயற்சித்தனர். இதனால் காவல்துறைக்கும், வழக்கறிஞர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடந்த மாதம் கோவை நீதிமன்ற வளாகம் அருகே பட்டப்பகலில் ரெளடி கொலை செய்யப்பட்டார்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீச்சு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.