கல்லறையில் க்யூஆர் கோடு பதித்து இறந்த மகனின் நினைவுகளுக்கு உயிரூட்டிய கேரள பெற்றோர்

திருச்சூர்:  கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குறியாச்சிரா பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். ஓமனில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி லீனா, ஓமனில் இந்திய பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியையாக உள்ளார். இவர்களது மகன் ஐவின் பிரான்சிஸ், டாக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 2021ம் ஆண்டு ஐவின் பேட்மின்டன் விளையாடும் போது துரதிருஷ்டவசமாக இறந்தார். அவரது வயது 26. ஐவின் டாக்டராக மட்டுமின்றி இசை, விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். சிறந்த மருத்துவராகவும் சமூகத்தில் பிரபலமாக அறியப்பட்டார்.

இளம் வயதில் மகனை இழந்தாலும், அவனது வாழ்க்கை மற்ற இளைஞர்களுக்கு உந்துதலாக இருக்க வேண்டும் என ஐவினின் பெற்றோர் எண்ணினர். அதற்காக ஐவினின் சகோதரி இவ்லின் பிரான்சிஸ் யோசனைப்படி, குறியாச்சிரா செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் உள்ள ஐவின் கல்லறையில் க்யூஆர் கோடு ஒன்றை பதித்துள்ளனர். இந்த க்யூஆர் கோடை ஸ்மார்ட் போனில் ஸ்கேன் செய்தால், ஐவினின் புகைப்படம், கல்லூரியில் அவரது நிகழ்ச்சிகள், நண்பர்கள் வட்டம், கீபோர்டு, கிடார் நிகழ்ச்சிகள் மற்றும் அவரைப் பற்றிய பிற விவரங்கள், ஆக்கப்பூர்வமான பணிகளை தெரிந்து கொள்ளலாம். இதற்காக தனியாக ஒரு இணையதளத்தையும் பிரான்சிஸ் குடும்பத்தினர் உருவாக்கி உள்ளனர்.

இது குறித்து ஐவினின் தந்தை பிரான்சிஸ் கூறுகையில், ‘‘ஐவின் பல நபர்களின் தகவல்களை க்யூஆர் கோடுகளாக உருவாக்கி எனக்கு அனுப்பி வைப்பார். அதைபோல, க்யூஆர் கோடு மூலம் ஐவினின் நினைவுகளுக்கு உயிரூட்ட விரும்பினோம். அதற்காக ஐவினைப் பற்றிய அத்தனை தகவல்களையும் தொகுத்து க்யூஆர் கோடாக உருவாக்கி கல்லறையில் பதித்துள்ளோம். ஐவினின் வாழ்க்கை மற்ற இளைஞர்களுக்கு ஓர் உந்துதலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இதனை நாங்கள் செய்துள்ளோம்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.