காலி பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால் ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் நெல்லை மாநகராட்சியில் சோதனை ஓட்ட முறையில் தொடங்கப்பட்டுள்ளது.
காலி தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால், ஒரு பாட்டிலுக்கு ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் இன்று நெல்லை மாநகரத்தில் சோதனை ஓட்டத்தில் தொடங்கப்பட்டது. நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் டவுண் சுகாதார அலுவலகத்தில், சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. ‘பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்’ என்ற விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி இதுபற்றி பேசுகையில், “விரைவில் நெல்லை மாநகராட்சியில் உள்ள 11 சுகாதார அலுவலகங்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். இதேபோல் பள்ளிகளில் மாணவிகள் காலி பாட்டில்களை கொடுத்து நாப்கின்கள் பெறும் வகையில் இயந்திரங்கள் விரைவில் அமைக்கப்படும். மாநகர பகுதிகுளிலும் இதே போல இயந்திரங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவையும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்” என தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM