* தடுப்பு சுவரை உயர்த்த வேண்டும்
* ஒளிரும் விளக்கு அமைத்தல் அவசியம்
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே அகலப்படுத்தப்பட்ட சாலையின் நடுவே அமைக்கப்பட்ட தடுப்புசுவர் (டிவைடர்) முன்பு ஒளிரும் விளக்கு அமைக்கப்படாததால், தடுப்புசுவர் இருப்பது தெரியாமல் தடுப்புசுவரில் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்குகிறது. தடுப்பு சுவரை சீரமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல்-கரூர் மாநில நெடுஞ்சாலையில் குளத்தூர், நல்லமனார்கோட்டை, தொட்டணம்பட்டி, எரியோடு, புதுரோடு, கோவிலூர், புளியம்பட்டி, குஜிலியம்பாறை, பாளையம், வெள்ளப்பாறை, டி.கூடலூர் ஆகிய ஊர்கள் உள்ளது.
மேலும் இவ்வூரைச் சுற்றி ஏராளமான உட்கடை கிராமங்கள் உள்ளது. இதனால் இவ்வழித்தட சாலையில் வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது. இதுமட்டுமின்றி குஜிலியம்பாறை அருகே 6 கிலோ மீட்டர் தொலைவில் தனியார் சிமென்ட் ஆலை உள்ளது. இதன் காரணமாக கனரக வாகனங்கள், டிப்பர் லாரிகள் போக்குவரத்தும் அதிகளவு இருந்து வருகிறது. அதிகளவு வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலை இரு வழிச்சாலையாகவே இருந்தது. இதனால் இச்சாலையில் அடிக்கடி வாகன விபத்து, டூவீலர் விபத்து நடந்தது.
வாகன போக்குவரத்திற்கு நெரிசலை குறைக்கவும், தொடர் வாகன விபத்துக்களை தடுக்கும் நோக்கில், திண்டுக்கல் மாவட்டம் தொட்டணம்பட்டியில் இருந்து குஜிலியம்பாறை வழியாக டி.கூடலூர் வரை சாலை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் உள்ள குறுகிய பாலங்கள் முழுவதும் அகற்றப்பட்டு, அகலப்படுத்தும் பணி நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து இடவசதி உள்ள இடத்தில் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் ஐந்து வருட ஒப்பந்த அடிப்படையில் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் இப்பணிகள் நடந்து வருகிறது.
வருகிற 2024ம் ஆண்டு ஜூலை மாதம் சாலை விரிவாக்க பணிகள் முழுவதும் முடிவடைகிறது. இன்னும் ஒன்றறை ஆண்டுகள் மட்டுமே ஒப்பந்த பணிகள் நடக்கவுள்ளது. இந்நிலையில் குஜிலியம்பாறை அருகே புளியம்பட்டியில் இருந்து தளிப்பட்டி சாலை பொம்மாநாயக்கன்பட்டி பிரிவு சாலை வரை சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. சாலை அகலப்படுத்தப்படும் போது சாலையின் நடுவே சென்டர் மீடியன் அமைக்கப்படுகிறது. இந்நிலையில் புளியம்பட்டியில் அகலப்படுத்தப்பட்ட சாலையில் நடுவே அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் முன்பு ஒளிரும் விளக்குகள் ஏதும் அமைக்கப்படவில்லை.
இதனால் இரவு நேரத்தில் சாலையின் நடுவே டிவைடர் இருப்பது தெரியாமல் வாகனங்கள் டிவைடரில் மோதி விபத்தில் சிக்குகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இரவு நேரத்தில் இச்சாலையில் கடந்து சென்ற லாரி, டிவைடரில் மோதி விபத்தில் சிக்கியது. லாரி மோதிய விபத்தில் தடுப்பு சுவர் முற்றிலும் சேதமடைந்தது. சேதமடைந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், இன்னும் தடுப்புசுவர் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இச்சாலையில் தொடர் வாகன விபத்து அடிக்கடி நடந்து வருகிறது.
எனவே புளியம்பட்டியில் சேதமடைந்துள்ள சாலை தடுப்புசுவரை சீரமைத்தும், சீரமைக்கப்பட்ட பின்னர் தடுப்புசுவர் முன்பு ஒளிரும் விளக்கு அமைத்து விபத்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடுகம்பாடி ஊராட்சி தலைவர் சேகர் கூறுகையில், புளியம்பட்டியில் இருந்து குஜிலியம்பாறை செல்லும் சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதில் புளியம்பட்டியில் துவங்கும் சாலையின் நடுவே அமைக்கப்பட்ட தடுப்புசுவர் முன்பு ஒருளிரும் விளக்குகள் ஏதும் அமைக்கப்பட வில்லை. மேலும் சாலையின் நடுவே அமைக்கப்பட்ட தடுப்பு சுவரும் (டிவைடர்) மிக குறைந்த அளவு உயரத்திலேயே இருப்பதால், இச்சாலையில் கடந்த வாகன ஓட்டிகளுக்கு தடுப்புசுவர் தெரியாமல் உள்ளது.
இதனால் இரவு நேரத்தில் தடுப்பு சுவரில் மோதி வாகன விபத்து ஏற்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு டூவீலர் விபத்தில் சிக்கிய வாலிபர் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. அதேபோல் லாரி ஒன்று தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தடுப்பு சுவர் சேதமடைந்தது. சேதமடைந்த தடுப்பு சுவர் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சேதமடைந்த தடுப்பு சுவர் மீதும் வாகனங்கள் மோதி தொடர் வாகன விபத்துக்கள் நடந்து வருகிறது.எனவே அசம்பாவித சம்பவம் நடக்கும் முன்பு சேதமடைந்த சாலை தடுப்புசுவரை சீரமைத்தும், சீரமைக்கப்பட்ட பின்னர் தடுப்பு சுவர் முன்பு ஒளிரும் விளக்கு அமைத்து விபத்து தடுப்பு நடவடிக்கை விரைவாக எடுக்க வேண்டும்.