ரயில்களில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில், 2021ல் செப்டம்பரில் ‘எகனாமி’ வகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான பயண கட்டணம், வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பயண டிக்கெட் கட்டணத்தை விட 6 முதல் 8 சதவீதம்வரை குறைவாக இருக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. சிறப்பான, மலிவான ஏ.சி. ரயில் பயணத்தை அளிப்பதற்காக இந்த வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் 72 படுக்கைகளும், ‘எகனாமி’ வகுப்பில் 80 படுக்கைகளும் வைக்கப்பட்டன. இந்த வகுப்பு பயணிகளுக்கு போர்வைகள் கிடையாது. இதன் மூலம் இந்தியன் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.231 கோடி வருவாய் கிடைத்தது. குறிப்பாக, 2022 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ஐந்தே மாதத்தில் சுமார் 15 லட்சம் பயணிகள் அந்த வகுப்பில் பயணம் செய்துள்ளனர். இதனால் ரயில்வே துறைக்கு ரூ.177 கோடி வருவாய் கிடைத்தது. அதன் பிறகு ‘எகனாமி’ வகுப்பு, வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளுடன் இணைக்கப்பட்டது. அவர்களுக்கும் போர்வை வழங்கும் செலவு சேர்ந்ததால் டிக்கெட் கட்டணம் ரூ70 வரை கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டது.
இதனால் இரு பிரிவினருக்கும் கட்டணம் சமமாகி விட்டது. இந்நிலையில், 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் மீண்டும் ‘எகனாமி’ வகுப்பு அமல்படுத்தப்படுவதாக ரயில்வே நேற்று அறிவித்தது. இதன்படி ஏற்கனவே ’எகனாமி’ வகுப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ‘எகனாமி’ வகுப்பு பயணிகளுக்கு 6 முதல் 8 சதவீதம்வரை கட்டணம் குறைவாக இருக்கும். இதுவரை 3 அடுக்கு ஏசியில் முன்பதிவு செய்திருப்பின் கூடுதல் தொகையை ஆன்லைன் மூலமாகவும், டிக்கெட் கவுண்ட்டர் மூலமாகவும் பயணிகள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.