குளச்சல்: குளச்சலில் கேரை மீன்கள் சீசன் தொடங்கி உள்ளது. இதற்கிடையே குறைவான அளவில் மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் கவலையடைந்து உள்ளனர். குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.
பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும். தற்போது விசைப்படகுகளில் கணவாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசனாகும். இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால் மீன் பிடித்து கரை திரும்பிய விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்லவில்லை.
ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் பாதியிலேயே கரை திரும்பின. அருகில் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் பைபர் கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றன.அவற்றுள் குறைவான மீன்களே கிடைத்தன. இந்தநிலையில் கடந்த வாரம் முதல் குளச்சல் கடல் பகுதியில் வீசி வந்த காற்று சற்று தணிந்தது. இதையடுத்து கடந்த 2 வாரமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத விசைப்படகுகள் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு சென்றன.
இதே போல் பைபர் வள்ளங்களும் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றன. மீன்பிடிக்க சென்ற படகுகளில் 11 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின. இவற்றுள் சூரை, புல்லன் மற்றும் கேரை ஆகிய மீன்கள் குறைவாகவே கிடைத்தன. மீனவர்கள் இம்மீன்களை துறைமுக ஏலக்கூடத்தில் கரையேற்றி விற்பனை செய்தனர். ஒரு கிலோ புல்லன் தலா கிலோ ரூ.40 விலை போனது. சூரை மீன்கள் ரூ.100 முதல் ரூ.120 வரையும் விலைபோனது.கேரை மீன்கள் தலா ஒரு மீன்கள் 40 கிலோ முதல் 90 கிலோவரை எடையிருந்தது. இது கிலோ தலா ரூ.250 வரை விலை போனது.கேரை சீசன் தொடங்கியும், அவை குறைவாக கிடைத்ததால் மீனவர்கள் கவலையடைந்தனர்.