இந்தியாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான தனுஷ் சமீபத்தில் வாத்தி படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து அவர் சாணிக்காயிதம், ராக்கி ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் சார்பில் தியாகராஜன் தயாரிக்கிறார். படத்துக்கு கேப்டன் மில்லர் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் நாயகான நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.
கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக பொள்ளாசியில் நடந்து வருகிறது. மேலும் இந்த படத்தின் பிரீ ரிலீஸ் விற்பனை 100 கோடி ரூபாய்களை நெருங்கியுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதனால் இந்த படத்தின் மீது மக்களிடையே பெறும் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதனிடையே தற்போது இந்த படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதன்படி தென்காசி அருகே உள்ள வனப்பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்த கேப்டன் மில்லர் படத்தின் மீது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு அருகில் ஷூட்டிங் நடத்தப்படுவதால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் இதனால் படப்பிடிப்பை அங்கு நடத்த தடைவிதிக்குமாறும் கீழப்பாவூர் யூனியன் கவுன்சிலர் புகார் கொடுத்துள்ளார்.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக அதிக வெளிச்சம் கொண்ட லைட்டுகள், வெடிகுண்டுகள், கால்வாய் சேதம் போன்றவற்றால் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார். அத்துடன் 15 குளங்கள் நீர்வரத்தின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து புகார் வந்துள்ளதை அடுத்து, தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.