புதுடில்லி :கொரோனா வைரஸ் பாதிப்பு திடீரென உயர்ந்துள்ளதற்கு, ‘எக்ஸ்.பி.பி., – 1..16’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் காரணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த பல மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்திருந்தது. இந்நிலையில், இந்த மாதத் துவக்கத்தில் இருந்து இதன் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, முந்தைய, 24 மணி நேரத்தில், புதிதாக, 1,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கடந்த, 140 நாட்களில் இதுவே அதிகபட்சமாகும். மேலும், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ‘இன்சகாக்’ எனப்படும் இந்திய கொரோனா பகுப்பாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, எக்ஸ்.பி.பி., – 1.16 என்ற புதிய உருமாறிய கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது.
கடந்த, ஜனவரியில், இந்த வகை கொரோனா பாதிப்பு இருவருக்கு இருப்பது உறுதியானது.
கடந்த பிப்.,ல் 140 பேருக்கும், இந்த மாதத்தில், 207 பேருக்கும் இந்த வகை கொரோனா பாதிப்பு உறுதியானது.இதுவரையிலும், 349 பேருக்கு இந்த வகை பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து, இந்த புதிய உருமாறிய வகை கொரோனாவால் தான்
பாதிப்பு அதிகரித்துள்ளதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனை முன்னாள் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா கூறியதாவது:கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறியபடி இருக்கிறது. இதையடுத்து,இந்த புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது. இதனால் அச்சப்படத் தேவையில்லை. இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.அதே நேரத்தில் மக்கள் முழு எச்சரிக்கையுடன், சுய கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்