கோடை காலம் தொடங்கியதால் விற்பனை தீவிரம்; தொற்று நோய் ஏற்படுத்தும் தரமற்ற ஐஸ் கட்டிகள்: சுகாதாரமற்ற குடிநீர் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

வேலூர்:  கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் சுகாதாரமற்ற குடிநீரினால் தயாரிக்கப்படும் ஐஸ் கட்டிகளால் தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் சாலையோரம் புதிதாக பழச்சாறு, ஜூஸ் கடைகள் முளைத்துள்ளன. இந்த கடைகளில் பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் தரமானதுதான என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது: சுகாதாரமற்ற குடிநீரினால் தயாரிக்கப்படும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு உருவாகும் குளிர்பானம், பழச்சாறு, சர்பத் போன்றவற்றை உட்கொள்வோருக்கு தோற்று நோய் வர வாய்ப்புள்ளது.

தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் பெரிய வகை ஐஸ் கட்டிகள் கடல் உணவு மற்றும் மலர் அங்காடிகளில் உணவு மற்றும் பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் பெரிய வகை ஐஸ் கட்டிகளில் மறுசுழற்சி ஆக விற்பனை செய்யக்கூடாது. ஐஸ் கட்டிகள் விலை குறைவானது என்பதற்காக சில்லரை மற்றும் சாலையோர வியாபாரிகள் இதனை பொதுமக்கள் உட்கொள்ளும் உணவுகளில் சேர்க்கக்கூடாது. இவ்வாறான ஐஸ் கட்டிகள் தொண்டை பாதிப்பு, சளி மற்றும் இருமல், மஞ்சள் காமாலை, காலரா போன்ற பல்வேறு வகையான தொற்று நோய் பாதிப்பு ஏற்படும்.

பொதுமக்கள் உட்கொள்ளக்கூடிய ஐஸ் உணவுகள் பாதுகாப்பு தரங்கள் சட்டம் மற்றும் விதிகள்படி நுண்ணுயிரியல் தரத்தினை கொண்டிருக்க வேண்டும். உட்கொள்ள கூடாத ஐஸ் வகைகளை அறிந்து கொள்ள ஏதுவாக தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் நிறத்தை நீல நிறமாகவும் வேறுபடுத்திக் காட்டவும், இதுபோன்ற ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் உரிமை பெறவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐஸ் கட்டிகளை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க வேதிப்பொருட்கள் கலப்போர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

தரமில்லாத குளிர்பானங்கள் உடலுக்கு ஆபத்து
கோடைகாலம் துவங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளிலும் தரமில்லாத குளிர்பானங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. கோடை காலத்தில் மக்கள் குளிர்பானங்களை அதிகம் பருகுவர். இந்தாண்டு, கோடைக்காலம் துவக்கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அனைத்து கடைகளிலும் லெமன் ஜூஸ், கலர் பவுடர் கலந்த குளிர்பானம் போன்றவை பல்வேறு வண்ணங்களில் பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு வருகின்றன. அதில் ஒரு சில தவிர பெரும்பாலான பாக்கெட்டில் தயாரிப்பு, காலவாதியாகும் தேதி, மூலப்பொருட்கள் உள்ளிட்ட விபரங்கள் இல்லை.

தரமில்லாத குளிர்பானங்கள் விற்பனை தற்போது அதிகரித்து வருகிறது. இதை குடிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகளும், ஆபத்தும் ஏற்படுத்தக்கூடும். எனவே பொதுமக்கள் வெளியே செல்லும்போது தரமில்லாத குளிர்பானங்களை அருந்துவதை கைவிட வேண்டும். மேலும் இதுபோன்ற குளிர்பானங்களை விற்பனை செய்வதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளும் முன்வரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.