கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சியில் 3,600 ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குப்பைகள் அகற்றிட தூய்மைப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாகவும், அதற்காக ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து தூய்மைப் பணியில் தனியார் மயத்தை கைவிட வேண்டும் என்றும், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் பணிக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கப்பட உள்ளதாக தூய்மைப் பணியாளர்கள் சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டன.
இதையடுத்து தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினருடன் மாநகராட்சி அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், இன்று முதல் தூய்மை பணியாளர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.