கோவை முதலாவது குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் கவிதா என்ற பெண் மீது சிவக்குமார் என்பவர் ஆசிட் வீசியுள்ளார். இதை தடுக்க முயன்ற வழக்கறிஞர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும், ஆசிட் வீசிய அந்த நபரை வழக்கறிஞர்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், ஆசிட் வீச்சில் காயமடைந்த கவிதா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, சிவக்குமாரிடம் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், முதற்கட்ட விசாரணையில் கணவரே மனைவி மீது ஆசிட் வீசியது தெரியவந்துள்ளது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது அவரது கணவரே ஆசிட் வீச்சில் ஈடுபட்டுள்ள சம்பம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் கடந்த மாதம் கீரனத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் மற்றும் சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இருவர் மீதும் கஞ்சா உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் வழக்கு தொடர்பாக ஆஜராக கோவை நீதிமன்றத்திற்கு வந்தனர். அப்போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் இருவரையும் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் கழுத்தில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.