கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ’131’ நாள்கள் கழித்து அதை ஆளுநர், தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்தார்.
இதனால், மீண்டும் சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்படும் என கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று கூடிய சட்டமன்றத்தில் மீண்டும் ஆன்லைன் தடைச் சட்ட மசோதா முதல்வர் ஸ்டாலினால் கொண்டுவரப்பட்டது. அப்போது பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ”மனசாட்சியை உறங்க வைத்துவிட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது. அரசியல் கொள்கை மாறுபட்டாலும் இதயம் எல்லோருக்கும் இருக்கிறது என்னும் அடிப்படையில், ஆன்லைன் சூதாட்டத்தால் யாருடைய உயிரும் போகக்கூடாது என்னும் நோக்கத்தில் எல்லோரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என்றார்.
அதன்படி எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. அ.தி.மு.க சார்பாக தாளவாய் சுந்தரம் ஆதரவு தெரிவித்துவிட்டு பேரவையில் அமர்ந்த பிறகு, அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரும் சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு அமர்ந்தார். உடனே எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ஒவ்வொரு கட்சியிலும் ஒருவருக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்க வாய்ப்பு கொடுக்கப்படும் நிலையில், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தாளவாய் சுந்தரம் பேசிய பிறகு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பு வழங்கியிருப்பது ஏன்? வேண்டுமென்றே பிரச்னையை ஏற்படுத்த திட்டமிட்டு இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறத” எனக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனால் சட்டமன்றத்தில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
அதற்கு பதிலளித்த அவைத் தலைவர் அப்பாவு, “உங்கள் விவகாரத்தை நாங்கள் பேசவில்லை. அது எங்களின் நோக்கமல்ல. ஒரு முன்னாள் முதலமைச்சர் என்னும் அடிப்படையில் அவருக்கு கருத்து சொல்ல வாய்ப்பு வழங்கப்பட்டது. அதற்கு தவறான வாதங்களைக் கற்பிக்க வேண்டாம்’’ எனக் கூறிய பின்னரும், அ.தி.மு.க-வினர் இரு தரப்பாகப் பிரிந்து அமளியில் ஈடுபட்டனர்.
பின்னர் மீண்டும் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் பக்கம் இருக்கும்போது, எப்படி அவரை (பன்னீர்செல்வத்தை) பேசச் சொல்லலாம், இது என்ன நியாயம்?” என அவர் கேட்கும்போதே, `அவர் துணைத் தலைவர்…’ என ஓ.பன்னீர்செல்வத்தை அவரின் ஆதரவாளர்கள் சுட்டிக்காடியது எடப்பாடி தரப்பினரை மேலும் கொதிப்படையச் செய்தது. குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் வேட்டியை மடித்துக் கட்டியும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான பி.ஆர்.ஜி.அருண்குமார், கோவிந்தசாமி ஆகியோர் எகிறி அடிக்கும் அளவு பாய்ந்து வாக்குவாதம் செய்தது பரபரப்பைக் கூட்டியது. “உறுப்பினர்கள் தடுக்காமல் இருந்திருந்தால் பேரவையில் கைகலப்பு நடந்திருக்கும்” என்கிறார்கள் நிகழ்வை நேரில் கண்டவர்கள்.
இப்படியாக அ.தி.மு.க உறுப்பினர்களுக்கிடையில் முட்டல் மோதல் சம்பவங்கள் நடக்க, அவைத் தலைவர் அப்பாவுக்கும் பா.ஜ.க-வைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனுக்குமிடையே விவாதம் நடந்தது.
நயினார் நகேந்தினர் பேசுகையில், “ஆளுநர் பற்றி அவையில் பேசக் கூடாது என்று நீங்கள் சொன்ன பிறகும், சிலர் தெலங்கானா வரை சென்று அங்கிருக்கும் ஆளுநரைக் குறித்து பேசுகின்றனர்” எனச் சுட்டிக்காட்டினார்.
உடனே அவைத் தலைவர் அப்பாவு, “அவங்க எங்க வேணும்னாலும் போகட்டும். நீங்க பாயின்ட்டுக்கு வாங்க. ஆளுநரின் தனிப்பட்ட விஷயங்களை யாரும் பேசவில்லை. இப்போ நீங்க சொல்லுங்க, ’41’ பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் மரணமடைந்திருக்கின்றனர். அது தப்புனா தப்புனு சொல்லுங்க, இல்லைனா 41 பேர் இறந்தது பிரச்னையில்ல… எத்தன பேரு வேணும்னாலும் சாகட்டும் பிரச்னையில்லனு சொல்லலாம்” என்றார்.
உடனே எழுந்த துரைமுருகன், “தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்காமல் இருப்பதைக் கண்டித்து பேச அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், முதல்வருடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அடக்கிக் கொண்டு எல்லாவற்றையும் குறைத்துதான் பேசுகிறார்கள். மேலும், பா.ஜ.க எண்ணும் கருத்தை முன்வைக்க அவருக்கு (நயினார் நகேந்திரன்) மட்டும்தான் வாய்ப்பிருக்கிறது. எனவே, என்ன கருத்தோ அதை சொல்லட்டும். நீங்க விட்டுருங்க…” என்றார்.
அதையடுத்து அவைத் தலைவர் அப்பாவு, “அவரு மனசுலையும் ஆதரிக்கணும்’னு தான் இருக்கு. ஆனா அவங்களுக்கும் அழுத்தம் இருக்கும்ல…” என்றார்.
இவர்கள் பேசியதில் சற்று குழம்பிய நயினார் நகேந்திரன்… சில குறிப்பிட்ட விஷயங்களைப் பேசிவிட்டு, இறுதியாக, `ஆளுநர் சூதாட்டம்’ எனக் குறிப்பிட்டுவிட்டு… உடனே அதை, `ஆன்லைன் சூதாட்டம்’ என திருத்திக் கொண்டு ஆதரவு தெரிவித்து அமர்ந்தார்.