உலக வெப்பமயமாதல் காரணமாக வரும் பத்தாண்டுகளில் சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா போன்ற முக்கிய இமாலய நதிகளின் நீரோட்டம் குறையும் என்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் எச்சரித்துள்ளார்.
ஐநாவில் நடைபெற்ற சர்வதேச பனிப்பாறைகள் பாதுகாப்பு கருத்தரங்கில் பேசிய குட்ரெஸ், 1900ம் ஆண்டு முதல் உலக சராசரி கடல் மட்டம் முந்தைய 3 ஆயிரம் ஆண்டுகளில் உயர்ந்ததை விட வேகமாக உயர்ந்து வருவதாக உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது என்று தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களைத் தவிர்க்க புவி வெப்பமடைதலை 1 புள்ளி 5 டிகிரிக்கு குறைக்க வேண்டுமென கூறிய குட்ரெஸ், நாம், நீர் சுழற்சியை உடைத்ததோடு, சுற்றுச்சூழல் அமைப்புகளை அழித்து, நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி விட்டதால், மக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.