சிறுவாச்சூர் அருள்மிகு ஸ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா முன்னேற்பாடு பணிகள் கலெக்டர், எஸ்பி., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோயில் மற்றும் அருள்மிகு பெரியசாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா 21 ஆண்டுகளுக்கு பிறகும், பெரியசாமி மலைக்கோவில் திருக்குடமுழுக்கு விழா 07 ஆண்டுகளுக்கு பிறகும் வருகின்ற 05.04.2023 புதன் கிழமை அன்று காலை நடைபெறவுள்ளது.
இந்த குடமுழுக்கு விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் மற்றும் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்க இருப்பதால், அதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள், குடிநீர், வாகனம் நிறுத்துமிடம், போக்குவரத்து வசதிகள் போன்ற அனைத்து விதமான அடிப்படை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் மற்றும் எஸ்பி.,ஷ்யாம்ளாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆ.கலியபெருமாள், இந்து சமய அறநிலையத்துறை இணைஆணையர் (திருச்சி மண்டலம்) செல்வராஜ், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் கணபதி, இந்து சமய அறநிலையத்துறை செயற்பொறியாளர் (திருச்சி மண்டலம்) பெரியசாமி, பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் மற்றும் மதுரகாளியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் வேல்முருகன் உள்ளிட்ட திருப்பணிக்குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.