விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கிளைச் சிறைச்சாலையில் சிறைவாசிகளுக்குப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார்.
இதில் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) செல்வன் ஜேசுராஜா சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் பேசுகையில், “நீங்கள் சிறையில் இருக்கும் நாள்களைப் பிரயோஜனமாகக் கழிக்க வேண்டும் என்பதற்காக இந்தப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒருவர் கருத்துச் சொல்லும் போது அவர் பேசுவது சரியா, தவறா என ஆராய்ந்து பார்ப்பதற்கான ஏற்பாடு நமது மூளையில் இல்லை. அதற்கு அறியாமைதான் முக்கிய காரணம். அந்த அறியாமையை போக்குவதற்கான மிகச்சிறந்த ஏற்பாடுதான் இந்த நிகழ்ச்சி. இது கடந்த ஒரு சில மாதங்களாக சிறைத்துறையில் ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரிய மாற்றம். கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற புத்தகத்திருவிழாவில் முதல் முறையாக சிறைத்துறையினர் சிறைவாசிகளுக்குப் புத்தகங்களை வழங்கி படிக்க வைக்க வேண்டும் என முடிவெடுத்தனர்.
சிறையில் இருப்பவர்களை நாங்கள் என்றைக்குமே குற்றவாளிகளாகப் பார்ப்பதில்லை. நீங்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள், நீதிபதிகள் தீர்ப்பு கொடுத்த பிறகுதான் குற்றவாளியாக மாறுகிறீர்கள். பல்வேறு விஷயங்களை நமக்குத் தரக்கூடியது கல்வி. அந்தக் கல்வியின் ஒரு பகுதியாகத்தான் இன்று புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள புத்தகங்களை வாய்ப்பு கிடைக்கும்போது படியுங்கள்.
இந்தச் சமுதாயத்தில் வாழ்வதற்குக் கல்வியும், பணமும் இருந்தால் மட்டும் போதாது. அதையும் கடந்து நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும். பணத்தேவை என்பது நம் உழைப்பால் இருக்க வேண்டும். தவறான வழியில் சம்பாதிப்பதையும் சொல்வதையும் திருத்திக்கொள்ளக் கல்வி தேவை” எனப் பேசினார்.
முன்னதாக கைதிகளின் மனவழுத்தத்தைக் குறைக்கும் விதமாகச் சிறைக்குள் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்களை, நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.