காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, அரியலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை செல்வதற்காக கும்பகோணம் சென்றார். இந்த நிலையில், 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம், கோலார் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சனம் செய்து பேசியிருந்தார்.
ராகுல் பேசியதற்கு எதிராக, குஜராத் பா.ஜ.க எம்.எல்.ஏ புனரேஷ் மோடி, அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த கே.எஸ்.அழகிரிக்கு தீர்ப்பு குறித்த தகவல் சொல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து திருச்சியிலிருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் கும்பகோணம் ரயில் நிலையம் வந்தது. உடனே கே.எஸ்.அழகிரி, சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் முன் மறியல் போராட்டம் நடத்தினார். இதில் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து போலீஸார் கே.எஸ்.அழகிரியை சமாதானம் செய்தனர். பின்னர் அழகிரி மறியல் செய்த அதே ரயிலில் சென்னைக்குப் புறப்பட்டார். முன்னதாக கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராகுல் காந்தியை, இந்தியாவைவிட்டு அப்புறப்படுத்த பா.ஜ.க விரும்புகிறது. அவரை நசுக்கி அவரது வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறது. இந்திய ஜனநாயகத்தைப் பற்றி ஐரோப்பிய நாடுகள் இன்றும் பெருமையாகப் பேசி வருகின்றன.
ஆனால், நாடாளுமன்றத்தை ஜனநாயகத்துடன் செயல்படவிடாமல் பா.ஜ.க முடக்கிவருகிறது. இது குறித்து கருத்து கூறினால் தேசவிரோதச் செயலில் ஈடுபடுவதாக பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்-ஸும் குற்றச்சாட்டு எழுப்புகின்றன. பா.ஜ.க-வுக்கு எதிராகக் கருத்து கூறினால், அது தேசவிரோதமாகுமா… அதானிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எடுத்துக் கூறினால், அதையும் தேசவிரோதம் என பா.ஜ.க கூறுகிறது.
இந்தியா, அதானிக்குச் சொந்தமானதா என எங்களுக்குத் தெரியவில்லை. ஜெர்மனியில் ஹிட்லர் எவ்வாறு அடக்குமுறையைக் கையாண்டாரோ, அதேபோல் பா.ஜ.க அடக்குமுறையைச் செயல்படுத்திவருகிறது. ராகுல் காந்தி எதையும் தகர்த்தெறிவார் என்பதில் எங்களுக்கு எந்த ஐயமுமில்லை” என்றார்.