சென்னை: ஏரியா சபை கூட்டங்களில் விதிகளின்படி வரி செலுத்தாதவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் அல்லது தலைவர், நிலைக் குழுத் தலைவர், மண்டல தலைவர் உள்ளிட்ட பதவிகள் உள்ளன. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபை அமைப்பதற்கான விதிகளை கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு வெளியிட்டது.
இதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் வார்டு கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் 5 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 4 முதல் 5 ஏரியா சபைகளும், 5 முதல் 10 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 6 முதல் 9 ஏரியா சபைகளும், 10 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 10 ஏரியா சபைகளும், நகராட்சிகளில் ஒரு வார்டில் 4 சபைகளும், பேரூராட்சியில் ஒரு வார்டில் 3 சபைகளும் அமைக்கப்பட்டன.
இதன்படி, சென்னையில் வார்டு கமிட்டி உறுப்பினர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும், வார்டு வாரியாக உதவிப் பொறியாளர்களை வார்டு கமிட்டிக்கு செயலாளராக நியமித்து அவற்றை நடத்துவதற்கான தீர்மானம் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் முதல் வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபை கூட்டங்களை நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பயிற்சி கூட்டம் இன்று (மார்ச் 23) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
இதில் துணை மேயர் மகேஷ் குமார் பேசுகையில், “ஏரியா சபை கூட்டங்களை நடத்துவது தொடர்பாக நாங்கள் கவுன்சிலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குகிறோம். கூட்டங்களை நடத்துவதில் சிரமம் இருந்தால் மண்டல அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும். மண்டல அலுவலர்களுக்கு ஏதாவது சிரமம் இருந்தால், அதை என்னிடம் தெரிவிக்க வேண்டும். எதிர்கட்சி மற்றும் தோழமை கட்சி உறுப்பினர்களும் உள்ளார்கள். இந்தக் கூட்டங்களின் முலம் அரசின் நோக்கம் நிறைவேற வேண்டும். முதல்வரின் நோக்கம் வெற்றி பெற வேண்டும்” என்றார்.
இந்தக் கூட்டத்தில் ஆணையர் ககன் தீப் சிங் பேடி பேசுகையில், “மக்களின் கருத்துகளை மாமன்றத்திற்கு கொண்டு சேர்க்கும் கூட்டமாக வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபை கூட்டங்கள் இருக்க வேண்டும். இந்தக் கூட்டங்களில், குப்பை மேலாண்மை, பூங்கா பராமரிப்பு, கழிவறை பராமரிப்பு, சாலைகள் பராமரிப்பு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்க வேண்டும். வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபை கூட்டங்கள் கண்டிப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.” என்று அவர் கூறினார்.
துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) விஷ்ணு மகாஜன் பேசுகையில், “விதிகளின்படி 3 மாதத்திற்கு ஒரு முறை வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபை கூட்டங்களை நடத்த வேண்டும். இந்தத் திட்டத்தில் அந்த வார்டுகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். அரசு திட்டங்களில் பயன் அடைபவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரியை செலுத்தாதவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். விதிகளின்படி இதை முறையாக மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
இதன்படி, அடுத்த மாதம் முதல் வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபை கூட்டங்கள் சென்னையில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் மண்டல அளவிலான அதிகாரிகள் தேதியை உறுதி செய்து பொதுமக்களுக்கு அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.