சென்னை: சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளில் ‘டெக் சிட்டி’ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களைத் அரசு தொடங்கவுள்ளதாக முதல்வர் பேசினார்.
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் சென்னையில் நடைபெறும், தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு உச்சி மாநாட்டினை (umagine) காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ( மார்ச் 23) தொடங்கி வைத்தார்.
இதில் முதல்வர் பேசுகையில்,” யுமாஜின் 2023 மாநாட்டில் பங்கெடுத்து சிறப்பிக்க வந்துள்ள தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் அனைவர்க்கும் எனது வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக சட்டமன்றப் பேரவைக் கூட்டம் நடைபெற்று வருவதால் நேரில் இந்த மாநாட்டுக்கு வருகை தந்து உங்களைச் சந்திப்பதற்கும், உரையாற்றுவதற்கும் வாய்ப்பு இல்லாமல் போன சூழலை நினைத்து வருந்துகிறேன். உங்களில் சிலரை நான் ஏற்கனவே சந்தித்துள்ளேன். சிலர் ஏற்கனவே தமிழகத்துடன் வர்த்தக உறவை மேற்கொண்டு வருபவர்களாக இருக்கிறீர்கள். எனவே தமிழகம் உங்களுக்கு புதிதல்ல.
உங்களது கனவுத் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளும் களமாக தமிழகத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி மலர்ந்தது. ஒரு கட்சி போய், இன்னொரு கட்சி ஆட்சிக்கு வந்தது என்றோ, ஒரு முதல்வர் போய்விட்டு – இன்னொரு முதல்வர் வந்தார் என்பது போலவோ சாதாரண மாற்றமாக அது இருக்கக் கூடாது என்று நான் நினைத்தேன்.
அதனால் தான் ‘திராவிட மாடல்’ என்ற கொள்கைத் திட்டத்தை வகுத்தேன். ஒரு அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்ற அரசியல், நிர்வாகத் திட்டம் அது. எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது அதன் அடித்தளம். எல்லாத் துறையும் வளர்ந்தால் தான் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும் என்பது அதன் உச்சிக் கோபுரம். இதுதான் திராவிட மாடல் கொள்கை ஆகும். அந்த அடிப்படையில் தொழில்நுட்பத் துறையிலும் எனக்கு ஒரு கனவு இருந்தது. தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் எத்தகைய முன்னேற்றத்தை அடைகிறதோ அதே தொழில்நுட்ப வளர்ச்சியானது. அதே காலத்தில் தமிழகத்திலும் உருவாக வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு ஆகும்.
1996 ஆம் ஆண்டே கம்யூட்டர் துறையை தமிழகத்தின் களமாக ஆக்கினார் அன்றைய முதல்வர் கருணாநிதி. ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில்நுட்பப் பூங்காவான டைட்டல் பார்க்கை சென்னையில் தொடங்கியவர் கருணாநிதி இதைத் தொடர்ந்து கோவையிலும் தகவல் தொழில்நுட்ப பூங்கா தொடங்கப்பட்டது. Ascendas park, DLF Infopark என்று தனியார் கூட்டுறவோடு தொடங்கப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களின் வெற்றியானது, அந்தத் துறையை மென்மேலும் வலுப்படுத்தி IT காரிடார் என்று அழைக்கப்படுகிற தொழில் தடத்தை மேம்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.
அவற்றின் தொடர்ச்சியாக சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளிலே டெக் சிட்டி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தொழில்நுட்பநகரங்களைத் தமிழக அரசு தொடங்கவுள்ளது. இந்த தொழில்நுட்பநகரங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும் நிதி நிறுவனங்களையும் புதிதாகத் தொழில் தொடங்கும் முனைவோர்களையும் ஒன்றிணைக்கக் கூடிய மையங்களாக விளங்கப் போகின்றன.
யுமாஜின் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைவரும் இணைந்து தமிழகத்தின் தொழில் நுட்ப எல்லையை மேலும் விரிவுபடுத்துவோம். தற்போது நடந்துகொண்டிருக்கும் யுமாஜின் மாநாடு அதற்கான ஒரு தொடக்கம் என்றே நான் கருதுகிறேன். தொழில்நுட்பம்தான் இந்த உலகை வெல்வதற்கான சரியான கருவி. புதியவற்றை கண்டுபிடிக்கவும், அதனை பயன்படுத்தவும் தொழில் நுட்பம் தான் நமக்கு உதவ முடியும்.
அதனால் தான் தொழில்நுட்பத் துறையின் கட்டமைப்பை மேம்படுத்த நினைக்கிறோம். தொழில்நுட்பத்திலே சிறந்த, வலிமையான மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிடவும் புதுப்புது தொழில்நுட்பங்களுக்கான வாய்ப்புகளைக் கண்டறிவதிலும் அவற்றைத் தொடர்ந்து அளித்திடவும் நம்முடைய அரசுத்துறைகள் ஓய்வின்றி உழைத்துவருகின்றன. அனைத்து தொழில்துறைகளின் பங்களிப்போடு 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்றஇலக்கை எட்ட வேண்டும் என்று நாம் தீர்மானித்துக் கொண்டிருக்கிறோம். மென்பொருள் சேவையைப் பொறுத்தவரையில், அத்துறையிலே உலகளாவிய வகையில் நாம் முதன்மை இடத்திலிருக்கிறோம்.
இந்தியாவில் அத்துறையில் பெரும்வெற்றியைப் பெற்ற நிறுவனங்கள் தமிழகத்தில்தான் இருக்கின்றன. தமிழகம், தகவல் தொழில்நுட்பத் துறையிலே ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில் மையமாக உருவெடுக்கும். தமிழகத்தின் உலகளாவிய திறன் மையங்கள்பெரும் அளவிலே தொடங்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்திய தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய திறன்மையங்கள் துறையிலே தமிழகம் ஏற்கெனவே பத்து சதவீதத்திற்கும் மேலாக பங்களித்து வருகிறது. 1300-க்கும் மேற்பட்ட தொழிலகங்கள் இத்துறையிலே இயங்கிவருகின்றன.
தானியங்கும் தொழில் துறையிலே புதியனவற்றைக் கண்டறிவதிலும் பயன்படுத்துவதிலும் நாம் முன்னணியிலே இருக்கிறோம். மேலும், தமிழகத்திலே மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களைப் பெற்றிருக்கிறோம். உலகளாவிய வர்த்தகச் சூழலுக்குத் தேவையான ஆற்றல்மிகு வல்லுநர்களைப் பெற்றிருக்கிறோம். இதனை மேலும் வளப்படுத்த இம்மாநாடு உதவ வேண்டும். நம்முடைய எண்ணமும் நட்புறவும் தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும். தொழில்நுட்ப அறிவையும், அதன் பயனையும் அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம்.” இவ்வாறு முதல்வர் பேசினார்.