சேலம், சுக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரின் மனைவி ஸ்ரீதேவி(பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஊர் காவல் படையில் பணியாற்றி வருகிறார். நேற்று கிச்சிப்பாளையத்தில் பாதுகாப்பு பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது, கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும், ஸ்ரீதேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கிச்சிபாளையம் காவல் நிலைய போலீஸார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து சதீஷை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் ஸ்ரீதேவி பேருந்து ஏற, பழைய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரைப் பின் தொடர்ந்து வந்த சதீஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், அப்பெண்னை இடது கையில் குத்தியுள்ளார். இதனால் பயந்த, அப்பெண் பேருந்து நிலையத்திற்குள் ஓடி உள்ளார். சதீஷ் அவரை விடாமல் ஒட ஒட பின் தொடர்ந்து கத்தியால் குத்த முற்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை கண்ட பொதுமக்கள் சதீஷினை பிடித்து சேலம் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த ஸ்ரீதேவி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் கைது செய்யப்பட்ட சதீஷிடம் போலீஸார் விசாரித்த போது, தானும் ஸ்ரீதேவியும் காதலித்து வந்ததாகவும், இந்த விஷயம் எனது மனைவிக்கு தெரிய வந்து, அவர் தன்னை விட்டு சென்று விட்டார் என்றும் கூறியுள்ளார். அதனால் ஸ்ரீதேவியை தன்னுடன் வந்துவிடுமாறு அழைத்ததாகவும் ஆனால், அதற்கு அவர் சம்மதிக்காததால், கத்தியால் குத்தியதாகவும் கூறியதாக தகவல் வெளியானது.
மேலும் படுகாயம் அடைந்த ஸ்ரீதேவியிடம் போலீஸார் விசாரிக்கையில், `சம்பந்தப்பட்ட சதீஷ் எனக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2 லட்சம் ஏமாற்றியுள்ளார். மேலும் ரூ. 5 லட்சம் பணம் தருமாறு மிரட்டி வந்தார். நான் பணம் கொடுக்க மறுக்கவே தன்னை கத்தியால் குத்திவிட்டார்’ எனக் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சேலம் டவுன் காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட சதீஷினை சிறையில் அடைத்தனர். விசாரணையின் முடிவில் தான் உண்மை தெரியவரும்!