சேலம்: எடப்பாடி அருகே பட்டாசு ஆலை தீ விபத்து – பெண் பலி; ஒருவர் படுகாயம்

சேலம், எடப்பாடி அருகே வெள்ளாளபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் அதே பகுதியில் தனது நண்பர் சுப்ரமணி என்பவருடன் சேர்ந்து பட்டாசு தயாரிக்கும் உரிமை பெற்று, கடை நடத்தி வருகிறார். இதில் சன்னியாசி கடை பகுதியை சேர்ந்த முருகன் மனைவி அமுதா, அதே பகுதியை சேர்ந்த வேடப்பன் உள்பட நான்கு பேர் பணியாற்றி வந்தனர்.

நேற்று வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றது. இரண்டு தொழிலாளர்கள் வேலைக்கு வராத நிலையில் அமுதா மற்றும் வேடப்பன் ஆகியோர் பட்டாசுகளை பார்சல் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், மாலையில் திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உள்ளே வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள், வெடி மருந்துகள் வெடித்து சிதறின. இதில் அமுதா மற்றும் வேடப்பன் ஆகியோர் உடல் கருகி படுகாயம் அடைந்தனர். வெடி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், ஓடி வந்து பார்த்தபோது அமுதா பரிதாபமாக உயிரிழந்து கிடந்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

இது குறித்த தகவல் கொங்கணாபுரம் போலீஸாருக்கு கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் உடல் கருகி உயிருக்கு போராடி வந்த வேடப்பனை உடனடியாக மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். இது குறித்த தகவல்கள் வெளிவரவே தமிழ்நாடு முதலமைச்சர், நிவாரண நிதியாக இறந்து போன அமுதா குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியும், படுகாயம் அடைந்த வேடப்பன் குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிதியும் அறிவித்தார்.

சேலத்தில் பட்டாசு ஆலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.