தேர்தல் நேரத்தில் சொன்னதையும் செய்திருக்கிறார், சொல்லாத வாக்குறுதிகள் இன்னுயிர் காக்கின்ற 48 காலை சிற்றுண்டி என இன்று நிறைவேற்றி பொற்கால ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் என அமைச்சர் சக்கரபாணி புகழாரம் சூட்டியிருக்கிறார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் 700 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் இளைய அருணா (MC) தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உணவு வழங்குதல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு 700 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது, ஒரு ஆட்சியினுடைய எண்ணங்களை எதிர்பார்ப்புகளை அறிந்து மக்களிடத்தில் சொல்லக்கூடியவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்று 23 மாதத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்த முடியாத திட்டங்களை எல்லாம் செயல்படுத்தி ஒரு பொற்கால ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்தியதால் இந்தியாவிலேயே தலை சிறந்த மாநிலம் என்று தமிழ்நாடு பெருமையை இன்று பெற்றுள்ளது. அந்த அளவுக்கு உழைத்துக் கொண்டிருக்கிறார்.
தேர்தல் நேரத்தில் சொன்னதையும் செய்திருக்கிறார்; இன்னுயிர் காக்கின்ற 48 காலை சிற்றுண்டி போன்ற சொல்லாத வாக்குறுதியும் இன்று நிறைவேற்றி பொற்கால ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சிக்காரர்கள் எதுவுமே செய்யவில்லை என்று சொல்கிறார்கள்; மனசாட்சி இல்லாமல் பேசுகிறார்கள். 505 வாக்குறுதிகள் சொன்னோம். அதில் பல வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். இன்னும் 36 மாதங்கள் இருக்கிறது. சொன்ன பிற வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.
நேற்று முன்தினம் நடைபெற்ற நிதிநிலை அறிக்கையில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று தெரிவித்தார். அதனை வழங்குவதற்கு அரசு தற்போது முடிவு செய்திருக்கிறது. தாய்மார்களின் எதிர்பார்ப்பை முதலமைச்சர் நிறைவேற்றி தந்திருக்கிறார். நிதி நிலைமை மோசமாக இருந்தாலும் அதனை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுத்தி இருக்கிறார்.
வடசென்னை வளர்ச்சிக்காக ஆயிரம் கோடி ரூபாய் முதலமைச்சர் அவர்கள் நிதி ஒதுக்கி உள்ளா.ர் இப்படி எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி பொற்கால நடத்தி வருகிறார். 2021இல் தமிழக முதலமைச்சராக தளபதி தான் நாட்டை ஆள வேண்டும் முடிவு செய்த மக்கள் சென்னை மாநகர மக்கள். முதலமைச்சர் சென்னை மாநகராட்சி மேயராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு முறை பணியாற்றி இருக்கிறார். சிங்காரச் சென்னையை உருவாக்கி இருக்கிறார். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பாலங்களை கட்டி இருக்கிறார்.
இப்படி எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் நடத்தினாலும் சென்னை மாநகரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்” என்று பேசினார். இதில் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர், ஜே.ஜே எபினேசர், மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM