ராஞ்சி: ஜார்க்கண்டின் கிரிதிக் மாவட்டத்தின் கோஷோடிங்கி கிராமத்தை சேர்ந்த பூஷண் பாண்டே மீது ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் அதிகாலை 3.20 மணிக்கு அவர் வீட்டிற்கு சோதனையிட சென்ற போலீசார், கதவை உடைத்து கொண்டு அதிரடியாக உள்ளே சென்றனர். இதில், தூங்கி கொண்டிருந்த பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை போலீசாரின் பூட்ஸ் காலால் மிதிபட்டு உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, முதல்வர் ஹேமந்த் சோரன் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட குழந்தையின் உடல் கூறாய்வு நீதிபதியின் கண்காணிப்பில் வீடியோ எடுக்கப்பட்டது. மருத்துவ அறிக்கையில், குழந்தையின் மண்ணீரல் நசுங்கியதில் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு சோதனைக்கு சென்ற 2 அதிகாரிகள் உள்பட 6 போலீசார் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.