மறைந்த திரைப்பட பாடகர் டி.எம். சவுந்தர ராஜனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பழம்பெரும் பாடகரான டி.எம். சவுந்தரராஜன் ஒரு காலத்தில் தமிழக இசைத்துறையின் ஜாம்பவனாக திகழ்ந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி. ஜெமினிகணேசன், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிகர்களுக்கு இவர் தான் அதிகளவில் பாடல்களை பாடினார். அந்தந்த நடிகர்களுக்கு ஏற்றவாறு தனது குரலை மாற்றி பாடுவது டி.எம். சவுந்தர ராஜன் தனி அடையாளமாக இருந்தது.
சுமார் 2500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள டி.எம். சவுந்தர ராஜன், கடந்த 2013-ம் ஆண்டு வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவருடைய 100-வது பிறந்த நாள் வரும் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு சென்னை மந்தைவெளியில் அவர் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படுகிறது.
இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் டி.எம். சவுந்தர ராஜானின் நூற்றாண்டு விழா வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.