தஞ்சாவூர்: தஞ்சாவூர், நிர்மலா நகரில் டயோசீஸ் சொசைட்டிக்கு சொந்தமான இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் பூங்கா அமைப்பதைக் கண்டித்து, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
நீதிமன்ற வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம், இந்த இடத்தில் பூங்கா அமைப்பதற்காக சீர் செய்வதையும், உடனடியாக, மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள போர்டை அகற்ற வலியுறுத்தி அவர்கள் கண்டன முழக்கமிட்டனர்.
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகித்த இந்தப் போராட்டத்தில், மாநகரத் தலைவர் எச்.அப்துல்நசீர், இந்திய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.சிமியோன்சேவியராஜ், மறை மாவட்ட வேந்தர் ஏ. ஜான்சக்ரியாஸ், நிர்வாகி ஜேம்ஸ் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இது குறித்து ஏ.ஜான்சக்ரியாஸ் மற்றும் பி.செந்தில்குமார் ஆகியோர் கூறும்போது, “60 ஆண்டுகளுக்கு மேலாகத் தஞ்சாவூர் மறை மாவட்டத்திற்கு சொந்தமாக இந்த இடம் இருந்தது. கடந்த 20 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வருகிறது. தற்போது மாநகராட்சி நிர்வாகம், எங்களுக்கு எதிராக வைத்துள்ள போர்டை உடனடியாக அகற்றாவிட்டால், 7 மாவட்டங்களில் உள்ளவர்களையும், பல்வேறு கட்சியினரைத் திரட்டி போராட்டம் செய்யப்படும்” எனத் தெரிவித்தனர்.