தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதன்காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.
மேலும், பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் மழை மற்றும் இடியால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் சென்னை தாம்பரம் பைபாஸ் சாலையில் மழைக்கு ஒதுங்கிய காவலர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மழை காரணமாக சாலை ஓரமாக ஒதுங்கிய காவலர் மீது அரசுப் பேருந்து மோதியதில் காவலர் நாகராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே இடி தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று மாலை இடி மின்னலுடன் கூடிய கன மழையின் போது மரத்தின் கீழ் ஒதுங்கி நின்ற நிலையில் இடி தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோல், திருவண்ணாமலை அடுத்த அண்டம் பள்ளம் கிராமத்தில் 11ம் வகுப்பு மாணவி வினோஷா இடி தாக்கி உயிரிழந்துள்ளார். எனவே பொதுமக்கள் வெளியில் செல்லும்போது பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.