தாயை கார் ஏற்றி கொன்ற தலைமறைவு மகன் கைது
தென்காசி: தென்காசி அருகே, சொத்துக்காக தாயை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மகன் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம், அச்சன்பதுார் வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் சங்கரநாராயணன்.
இவரது மனைவி முருகம்மாள், 61. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். டாக்டர் சங்கரநாராயணன், 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் பலியானார்.
இது தொடர்பான வழக்கு நெல்லை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக, ௩ம் தேதி முருகம்மாள், அவரது இளையமகன் உதயமூர்த்தியுடன் ‘பைக்’கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பைக்கின் பின்னால் காரில் வந்த, முருகம்மாளின் மூத்த மகன் மோகன், பைக் மீது காரை மோத செய்து, முருகம்மாளை கொலை செய்தார். உதயமூர்த்தி படுகாயமடைந்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக, இலத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிய மோகனை தேடி வந்தனர்.
இந்நிலையில், இலத்துார் போலீசார், வாகன சோதனையின் போது பிடிபட்ட மோகனை கைது செய்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊழியர்களை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபர் கைது
ருவண்ணாமலை,: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் அலுவலகத்தில், அரிவாளுடன் நுழைந்து ஊழியர்களை வெட்ட முயன்ற, போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று பகல், 12:40 மணிக்கு, அரிவாளுடன், தெற்கு கோபுரம் வழியாக, பிரம்ம தீர்த்தகுளம் எதிரிலுள்ள கோவில் அலுவலக அறைக்குள், குடிபோதையில் வாலிபர் நுழைந்தார்.
கோவில் இணை ஆணையர் குமரேசன் அறைக்குள் சென்று, அங்குள்ள நாற்காலியில் அமர்ந்து, ரவுடி போல அரிவாளை சுழற்றினார். தடுக்க முயன்ற ஊழியர்களை அரிவாளால் தாக்க முயன்றார்.
மேலும், அலுவலகத்திலுள்ள அனைத்து கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினார். அச்சத்தில் ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.
தகவலின்படி கோவில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு வந்ததும், வாலிபர் தப்பியோட முயன்று, அங்கிருந்த கூரை மீது ஏறினார். அப்போது கூரை பிய்ந்து கீழே விழுந்ததில், அவரது காலில் முறிவு ஏற்பட்டது.
அவரை மடக்கி பிடித்த போலீசார், அவருடன் வந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில், பெங்களூருவை சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் ஜெனீபர், 23, உடன் வந்தவர் அவரது ஆண் நண்பர் பிரித்தம், 30, என்பது தெரிந்தது.
இருவரும் கண்ணமடை காப்புக்காட்டில் போதையில் சுற்றித் திரிந்தபோது, வனத்துறையினர் பிடிக்க முயன்றதால், அவ்வழியாக பைக்கில் வந்தவரை தாக்கி தள்ளிவிட்டு, அந்த பைக்கில் தப்பி, கோவிலில் நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
அந்த வாலிபரிடம் அரிவாள் எப்படி கிடைத்தது உள்ளிட்ட விபரங்களை, திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
80 சவரன் நகை, பணம் முதியோரிடம் கொள்ளை
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே, வயதான தம்பதியரை மிரட்டி, 80 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற, முகமூடி திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த சப்பானிப்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கசாமி, 88, ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவி சென்னம்மாள், 77. நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்தனர்.
அப்போது மூன்று பேர், முகமூடி போல கருப்பு துணியை முகத்தில் கட்டிக் கொண்டு வீட்டிற்குள் புகுந்தனர்.
அவர்கள், வயதான தம்பதியை கத்தி முனையில் மிரட்டி வீட்டிலிருந்த, 80 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், 3 லட்சம் ரூபாய் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர். அவற்றின் மொத்த மதிப்பு, 35 லட்சம் ரூபாயாகும்.
ரங்கசாமி புகார்படி, காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமண வாலிபர் கொலை கொலையாளியின் வீடு சூறை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, காதல் திருமணம் செய்ததால் கொலை செய்ததால் கொல்லப்பட்ட ஜெகனின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கொலை செய்தவரின் வீட்டை, ஜெகனின் உறவினர்கள் சூறையாடினர்.
கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகன், 25, டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. அவதானப்பட்டி அடுத்த புழுகான்கொட்டாயைச் சேர்ந்தவர் சரண்யா, 23. உறவினர்களான இவர்கள், பள்ளிப்பருவத்திலிருந்து காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தன் வீட்டினரின் எதிர்ப்பை மீறி, ஜன., 26ல் ஜெகனை சரண்யா திருமணம் செய்தார்.
இந்த ஆத்திரத்தில் சரண்யாவின் தந்தை சங்கர், 43, இருவருடன் சென்று, நேற்று முன்தினம் பட்டப்பகலில் கிருஷ்ணகிரி டேம் ரோடு அருகே, ஜெகனின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார்.
இக்கொலை தொடர்பாக, ஜெகனின் தந்தை சின்னப்பையன் புகார்படி, காவேரிப்பட்டணம் போலீசார், கொலையாளிகளை தேடினர்.
அன்றிரவு கிருஷ்ணகிரி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில், சங்கர் சரணடைந்தார். இந்நிலையில், சங்கர் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை நேற்று முன்தினம் நள்ளிரவில், ஜெகனின் உறவினர்கள் அடித்து உடைத்தனர்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்ட ஜெகனின் உடலை வாங்க முடியாது என அவரது உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து கொலையாளிகளை பிடித்து விடுவோம் என உறுதியளித்ததால், உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
நிலம் வாங்கித் தருவதாக ரூ.82 லட்சம் மோசடி செய்த இடைத்தரகர் கைது
திருச்சி : திருச்சியில், போலி ஆவணத்தை கொடுத்து 82 லட்சம் ரூபாய் மோசடி செய்த இடைத்தரகரை, நேற்று, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி, கே.கே நகர் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் மனைவி கவிதா, 55, என்பவருக்கு, ஓலையூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் இடைத்தரகரான டேனியல் ஜூலியஸ் ராஜ், 48, என்பவர், சாத்தனுார் பகுதியில் 6,000 சதுர அடி நிலத்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதற்கான ஆவணங்களை சரி பார்த்த போது, அந்த இடம் வேறு ஒருவருக்கு சொந்தமானது எனத் தெரிய வந்தது.
எனவே, போலி ஆவணங்கள் மூலம் தன்னை ஏமாற்றி, 82 லட்சம் ரூபாய் மோசடி செய்த டேனியல் ஜூலியஸ் ராஜ் மீது நடவடிக்கை எடுக்குமாறு, 2021-ம் ஆண்டு, திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், கவிதா புகார் அளித்தார்.
மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். தலைமறைவாக இருந்த டேனியல் ஜூலியஸ் ராஜை, நேற்று, இன்ஸ்பெக்டர் கோசல்ராம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
தட்சிண கன்னடா: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை மிரட்டல் விடுத்த தனியார் பஸ் டிரைவருக்கு, ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்றம், 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் மாரகாடாவைச் சேர்ந்தவர் தயானந்தா தன்னன்னவர், 30. தனியார் பஸ் டிரைவர்.
இவருக்கு, ‘இன்ஸ்டாகிராம்’ மூலம், 13 வயது சிறுமியின் நட்பு கிடைத்தது. கடந்தாண்டு ஜனவரி 27ம் தேதி, வெளியே செல்லலாம் என சிறுமியை அழைத்துள்ளார்.
முதலில், அவர் வர மறுத்து விட்டார். ஆனாலும், கட்டாயப்படுத்தி, ஜன., 28ல் சிறுமியை ஆட்டோவில், ஹம்பன்கட்டாவுக்கு அழைத்து சென்றார்.
அங்கு லாட்ஜில் அறை எடுத்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி, இவ்விஷயத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார்.
பின், சிறுமியை, அவரது வீட்டில் விட்டு சென்று விட்டார். சிறுமி, நடந்த விஷயத்தை பெற்றோரிடம் தெரிவித்தார்.
பெற்றோரும், மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார், தயானந்தாவை கைது செய்தனர்.
இவ்வழக்கு, தட்சிண கன்னடா மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ராதாகிருஷ்ணா முன் விசாரணைக்கு வந்தது.
விசாரித்த நீதிபதி, ‘தயானந்தா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த தவறினால், கூடுதலாக நான்கு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
‘பாதிக்கப்பட்ட சிறுமியின் படிப்புக்காக, அரசு உடனடியாக 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மேலும், தேசிய வங்கியில், சிறுமியின் பெயரில் 2 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்த வேண்டும்’ என தீர்ப்பளித்தார்.
கத்தியை காட்டி மிரட்டி போன் பறித்த இருவர் கைது
அவிநாசி : சேவூர், சூளை பகுதி பாஸ்கர் தெக்கலுாரில் ஒரு பேக்கரியில் டீ குடிக்க, சென்றார். டூவீலரில் வந்த இருவர் பாஸ்கரை தாக்கி, மொபைல் போனை பறித்தனர். திருப்பூர், கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த ரவி, அவிநாசி – திருப்பூர் பைபாஸ் ரோட்டில் டிபன் கடை வைத்துள்ளார். சாப்பிட வருவதுபோல வந்த இருவர், கத்தியை காட்டி மிரட்டி, ரவியின் மொபைல் போனை பறித்து டூவீலரில் தப்பிக்க முயன்றனர்.
சுதாரித்த ரவி, சத்தம் போடவே, அருகிலிருந்தவர்கள், இருவரையும் மடக்கி பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் மதுரையை சேர்ந்த அருண்பாண்டியன் 20, ஆரணியை சேர்ந்த துளசிராமன் 22 என்பது தெரிந்தது. இருவரும் சேர்ந்து டூவீலரில், சென்று, அவிநாசி பகுதிகளில் மொபைல் போன் பறித்தது தெரியவந்தது. இருவரையும் அவிநாசி போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்