ஸ்ரீநகர்: “வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலிமையாக போராட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டியது அவசியம். ஆனால் அப்படி நடக்குமா என்பது தெரியவில்லை” என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகரில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் தலைமையில் ஒரு பெரிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைய வேண்டியது அவசியமாய் இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சி முகாமில் விரிசல்களை உண்டு பண்ணி அப்படி ஒன்று நடந்து விடாமல் பாஜக கவனமாக பார்த்துக்கொள்கிறது. எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒன்றிணையாத வரை பாஜகவுக்கு வலிமையான எதிர்ப்பு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகளின் கழுத்தில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வுத்துறைகளின் மூலம் கத்தி வைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நிலையில் அவர்கள் ஒன்றிணைவது சாத்தியமா என்பதும் தெரியவில்லை. அகிலேஷ், மாயாவிதியைப் பாருங்கள் இந்த விஷயத்தில் அவர்கள் எதுவும் பேசாமல் ஏன் மவுனமாக இருக்கிறார்கள்.
இவ்வளவு வலிமையுடன் ஆட்சிக்கு வந்த பாஜக பல அதிசயங்களைச் செய்திருக்க முடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சொன்னது போல அவர்களிடம் நாட்டிற்கான எந்த திட்டமும் இல்லை.
ஒரே ஒரு விஷயம் மட்டுமே உள்ளது. அவர்கள் இந்த நாட்டை ஒரு “மாஃபியா” வைப் போல ஆள நினைக்கிறார்கள் என்று தெரிகிறது. உங்களின் சொந்த வழியில் எதுவும் நடக்காதபோது, அனைத்து குறுக்குவழிகளையும் கையாளுகிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில், எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓரணியில் இணைவார்களா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. மம்தா பானர்ஜி, கேசிஆர், அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு வழியில் பயணிக்கிறார்கள். காங்கிரஸ் முக்கியமான அங்கம் என்பதால், அது எதிர்க்கட்சிகளை வழிநடத்துவதை பாஜக விரும்பவில்லை. அதற்காக, பிரித்தாளும் வேலையைச் செய்கிறது என்றார்.
மேலும் சிறுபான்மையினர் குறித்த கேள்விக்கு பதிலளித்த முஃப்தி, “இனி அவர்களின் இலக்கு முஸ்லிம்களாக மட்டுமே இருக்கப்போவதில்லை. இந்தமுறை சிறையிலடைக்கப்பட்டவர்களைப் பார்த்தால் உங்களுக்கு புரியும். அவர்கள் முஸ்லிம்கள் இல்லை. மணீஷ் சிசோடியா முஸ்லிம் இல்லை, சரத் பவாரின் கட்சியினர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள், சஞ்சய் ராவத் சிறையில் இருந்தார். இப்போது அவர்கள் ராகுல் காந்தியின் பின்னால் செல்கிறார்கள். இதன் மூலம் அவர்களின் இலக்கு முஸ்லிம்கள் மட்டும் இல்லை என்று புரிகிறது. பாஜகவுக்கு எதிராக யார் இருக்கிறார்களோ, கருத்து தெரிவிக்க முயற்சிக்கிறார்களோ அவர்களை குறிவைக்கிறார்கள்.
இதில் இந்துக்கள், சீக்கியர்கள், தலித்துகள் அனைவரும் அடக்கம். ஹாத்ராஸில் என்ன நடந்தது என்று நீங்கள் பார்த்தீர்கள். பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் மட்டும் விடுவிக்கப்படவில்லை. இந்துப்பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொலை செய்த ராம் ரஹீமும் இன்னும் வெளியில் தான் இருக்கிறான். எல்லோரும் இந்து ராஜ்ஜியத்தை பற்றி பேசுகிறார்கள். நான் அதை இந்து ராஜ்ஜியம் என்று நினைக்கவில்லை. அது பாஜக ராஜ்ஜியம். அங்கு நீங்கள் யாருடன் இருப்பீர்கள் யாருக்கு எதிராக இருப்பீர்கள்” இவ்வாறு மெகபூபா தெரிவித்தார்.