குவஹாத்தி, அசாமில் ஆறு ஆண்டுகளாக சேமித்த நாணயங்களை மூட்டையாக கட்டி வந்து ஒருவர் புதிய ‘ஸ்கூட்டரை’ வாங்கிய சம்பவம் குறித்த ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வடகிழக்கு மாநிலமான அசாமின் டாரங் மாவட்டத்தில் சிபஜ்ஹரைச் சேர்ந்தவர் முகமது சைதுல் ஹாக். ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த இவர், கடந்த ஆறு ஆண்டுகளாக, 1, 2, 5, 10 ரூபாய் நாணயங்களை சேமித்து வந்தார்.
இந்த நாணயங்கள், 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு வந்த நிலையில், முகமது இவற்றை மூட்டையாக கட்டி, நேற்று குவஹாத்தியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமிற்கு எடுத்து சென்றார்.
இதை பார்த்து ஆச்சரியமடைந்த ஷோரூம் உரிமையாளர், முகமதுவை பாராட்டியதுடன், அவர் எடுத்து வந்த நாணயங்களை பெற்று, புதிய ஸ்கூட்டருக்கான சாவியை வழங்கினார்.
இது குறித்து முகமது கூறுகையில், ”ஸ்கூட்டர் வாங்கும் கனவுடன் கடந்த ஆறு ஆண்டுகளாக நாணயங்களை சேமித்து வந்தேன். அந்த கனவு நேற்று நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.
இதற்கிடையே, தான் சேமித்த நாணயங்களை மூட்டையாக கட்டி வந்து ஒருவர் ஸ்கூட்டர் வாங்கியது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement