கோவையில் கத்தியுடன் சமூக வலைதளத்தில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சுகந்தராம். இவர் மீது நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கோவை கணபதி, காமராஜபுரம் சங்கனூர் சாலை அருகே உள்ள பேக்கரி ஒன்றின் அருகே, கையில் கத்தியை வைத்தவாறு இரும்பு பொருள்களின் மீது தேய்த்து வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் சுகந்தராம் மீது ஆயுத தடை பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் சமீப காலமாக ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிடும் இளைஞர்கள் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது போன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுவோர் மீது வழக்கு பதிவுசெய்து கைது நடவடிக்கை தொடரும் என மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM