காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது தான் தேசிய அளவில் ஹாட் டாபிக். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் காங்கிரஸ் கட்சிக்காக ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ’அதெப்படி எல்லா திருடர்களும் தங்களது பெயருக்கு பின்னால் ’மோடி’ என்ற பெயரை வைத்துக் கொள்கின்றனர்?’ எனக் கேள்வி எழுப்பினார்.
அதைத் தொடர்ந்து ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த 2021 அக்டோபர் தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய சூரத் நீதிமன்றத்திற்கு ராகுல் காந்தி நேரில் சென்றிருந்தார். கடந்த மார்ச் 17ஆம் தேதி அன்று அனைத்து வாதங்களும் நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று (மார்ச் 23) தீர்ப்பு வழங்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.
அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதன்படி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதேசமயம் 30 நாட்களில் மேல்முறையீடு செய்யலாம் என்று அனுமதி வழங்கி, கூடவே ஜாமீனும் வழங்கியது.
இந்தநிலையில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு பிரியங்கா காந்தியும், காங்கிரஸின் தீவிர எதிர்ப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் எதிர்வினை ஆற்றியுள்ளனர். இது குறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில், ‘‘உண்மையை கண்டு பயந்துபோன ஒன்றிய அரசின் முழு இயந்திரமும் ராகுல் காந்தியின் குரலை கொக்கி அல்லது வக்கிரம் கொண்டு ஒடுக்க முயல்கிறது.
என் சகோதரன் ஒருபோதும் பயந்ததில்லை, பயப்படவும் மாட்டார். அவர் உண்மையைப் பேசி வாழ்ந்தார், தொடர்ந்து உண்மையைப் பேசுவார். நாட்டு மக்களின் குரலை தொடர்ந்து எழுப்புவோம். உண்மையின் சக்தியும், கோடிக்கணக்கான நாட்டு மக்களின் அன்பும் அவரிடம் உள்ளன’’ என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
அதேபோல் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘பாஜக அல்லாத தலைவர்கள் மற்றும் கட்சிகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை ஒழிக்க சதி நடக்கிறது. காங்கிரஸுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன, ஆனால் ராகுல் காந்தியை இப்படி அவதூறு வழக்கில் சிக்க வைப்பது சரியல்ல. கேள்வி கேட்பது பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் வேலை. நாங்கள் நீதிமன்றத்தை மதிக்கிறோம், ஆனால் தீர்ப்பை ஏற்கவில்லை’’ என அவர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியை சுற்றி வளைத்த போலீஸ் குழு; டெல்லியில் பதற்றம்.!
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலோட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ஹிமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சாகு உள்ளிட்ட காங்கிரஸ் முதலமைச்சர்களும் ஒன்றிய பாஜக அரசை கடுமையாக சாடி வருகின்றனர். அதேபோல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடதக்கது.