காஞ்சிபுரம்: உலக தண்ணீர் தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஐந்தாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2,000 ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும், 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளன. அதே வேளையில், நிலம் கையகப்படுத்துதல் பணி மற்றும் விமான நிலையம் திட்டத்திற்கு 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கிராம சபைக் கூட்டங்களில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவருகிறது. இதன்படி, உலக தண்ணீர் தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஐந்தாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏற்கெனவே சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி மற்றும் உள்ளாட்சி தினம், குடியரசு தனம் என்று 4 முறை பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் இன்று 5-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.