புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். அதே ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி முதல்முறையாக ‘மனதின் குரல்’ என்ற பெயரில் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அதன் பிறகு ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் வானொலியில் அவர் உரையாற்றி வருகிறார். இணையதளம் வாயிலாக நாட்டு மக்களின் கருத்தைக் கேட்டு அதையும் தனது உரையில் இடம்பெறச் செய்கிறார். அத்துடன் தங்கள் துறையில் சத்தமின்றி சாதனை படைக்கும் நபர்களைப் பற்றிய தகவலையும் பகிர்ந்து கொள்கிறார்.
அந்த வகையில் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 30-ம் தேதி ஒலிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கான பொறுப்பாளர்களாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் துஷ்யந்த் கவுதம் மற்றும் வினோத் தாவ்டே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒலிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஒலிபரப்பு செய் வதற்கான நடவடிக்கையிலும் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.