புதுடில்லி:பிரிட்டனின் பணவீக்கம், கடந்த பிப்ரவரி மாதத்தில் 10.4 சதவீதம் அளவுக்கு உயர்வைக் கண்டுள்ளது. கடந்த 4 மாதங்களில், முதன் முறையாக இந்த அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது.
இந்த உயர்வு, பொருளாதார நிபுணர்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. பணவீக்கம் இந்த அளவுக்கு அதிகரிக்கும் என பலர் எதிர்பார்க்கவில்லை.
மேலும், இந்த பணவீக்க உயர்வு, பிரிட்டனின் மத்திய வங்கியான ‘பேங்க் ஆப் இங்கிலாந்து’ வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கும் தள்ளியுள்ளது.
கடந்த ஜனவரியில், பிரிட்டனின் சில்லரை விலை பணவீக்கம் 10.1 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 10.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
குடும்ப பட்ஜெட்டை கடுமையாக பாதிக்கும் அளவுக்கு எரிபொருள் விலை அதிகரித்ததை அடுத்து, சில்லரை விலை பணவீக்கமும் அதிகரித்திருப்பதாக, அந்நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நிபுணர்கள், சில்லரை விலை பணவீக்கம் நடப்பாண்டின் இறுதியில் நன்றாக குறையும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது ‘பேங்க் ஆப் இங்கிலாந்து’ பராமரிக்க வேண்டிய இலக்கான 2 சதவீதத்தை விட, 5 மடங்கு உயர்ந்துள்ளது, கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
உலகளவில் வங்கி துறையில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில், பேங்க் ஆப் இங்கிலாந்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்த, வட்டி உயர்வை இன்று நடைபெற உள்ள பணக்கொள்கை குழு கூட்டத்தில் அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த டிசம்பர் 2021லிருந்து, தொடர்ந்து 10 முறையாக வட்டி உயர்வை அறிவித்து வருகிறது, பேங்க் ஆப் இங்கிலாந்து. இதையடுத்து, அங்கு தற்போதைய வட்டி விகிதம் 4 சதவீதமாக உயர்வை கண்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்