ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சிக்கு தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் வழக்கம் போல் நேற்று பொருட்காட்சிக்கு வந்த பொதுமக்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த ராட்சத ராட்டினத்தில் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது உயரமாக எழும்பிய ராட்டினம் திடீரென கீழே மெதுவாக இயக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக அதிவேகத்தில் கீழே சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது ராட்டினத்தில் இருந்த 11 பேருக்கு காயம் ஏற்பட்டது.
ராட்டினத்தை சுற்றி ரசித்து கொண்டிருந்த பொதுமக்கள் ராட்டினம் கீழே சரிந்து விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் உதவியோடு ஜேஎல்என் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஊஞ்சல் ஆபரேட்டர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.