கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகன்(25). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவர், முழுக்கான்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கர்(43) என்பவரின் மகள் சரண்யாவை(21) காதலித்துள்ளார். இதற்கு சங்கர் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் ஜனவரி 26ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில், ஜெகனை நேற்று முன்தினம் மதியம் சங்கர் உள்பட சிலர், கிருஷ்ணகிரி டேம் கூட்ரோடு அருகே உள்ள சர்வீஸ் சாலையில் வழிமறித்து, அரிவாளால் சரமாரி வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் சங்கர், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். கோர்ட் உத்தரவின்பேரில் அவரை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, முழுக்கான்கொட்டாயில் உள்ள சங்கரின் வீட்டிற்கு சென்ற ஜெகனின் உறவினர்கள் டிவி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். இதனிடையே ஜெகனை கொலை செய்த மற்றவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.