மக்களவையில் விவாதமின்றி பட்ஜெட் ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல்! என்ன காரணம்? சபாநாயகர் விளக்கம்

இந்த வருட பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கான ஒப்புதலை மக்களவை அளித்துள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு மக்களவை கூடி குரல் வாக்கெடுப்பு மூலம் பட்ஜெட் ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் அளித்தது. நேரமின்மை காரணமாக விவாதம் இன்றி ஒப்புதல் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என சபாநாயகர் ஓம் பிர்லா குறிப்பிட்டார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதம் தொடங்கிய நாளிலிருந்து தினமும் பாஜக – எதிர்க்கட்சிகள் மோதல் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பட்ஜெட் ஒதுக்கீடுகள் தொடர்பாக இதுவரை எந்த விவாதமும் நடைபெறவில்லை. மோதல் போக்கு தொடர்வதால் வரும் நாட்களிலும் விவாதம் நடத்தக்கூடிய சூழல் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

image
ஏற்கனவே ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கான பட்ஜெட்டும் இதே போல விவாதம் இன்றி மக்களவை ஒப்புதலை பெற்றுள்ளது. பட்ஜெட் திட்டங்களுக்கான ஒப்புதலை அளிக்கும் “பைனான்ஸ் பில்” மசோதாவுக்கும் விவாதமின்றி ஒப்புதல் அளிக்கக்கூடிய சூழல் நிலவுகிறது என பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். பட்ஜெட் ஒதுக்கீடுகளுக்கு மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என தொடர் முழக்கங்களை எழுப்பினர்.
பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் மக்களவையில் அமர்ந்திருந்த நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் கூறினார். ஏற்கெனவே பாஜக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அலுவல்களில் பங்கேற்க வேண்டும் என கொறடா மூலம் அறிவுறுத்தப்பட்ட நிலையில், மக்களவையில் அமர்ந்திருந்த பாஜக உறுப்பினர்கள் குரல் வாக்கெடுப்பில் பங்கேற்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து “அப்ராப்ரிகேஷன் பில்” என அழைக்கப்படும் நிதி ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா இன்று அறிவித்தார். பின்னர் மக்களவை வெள்ளிக்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
image
இன்று மக்களவையில் மீண்டும் அமளி நிலவிய காரணத்தால் முதலில் மதியம் 2 மணி வரையும் பின்னர் மாலை 6 மணி வரையும் அவை ஒத்திவைக்கப்பட்டது. ஆறு மணிக்கு அவை கூடியதும், விரைவாக பட்ஜெட் ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் பணி நடைபெற்றது. பாஜக-எதிர்க்கட்சிகள் மோதல் தொடர்ந்ததால், மாநிலங்களவை வழக்கம் போல முதலில் இரண்டு மணி வரையும் பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சூழலில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு தங்கள் கடும் எதிர்ப்பை முதலில் அவையிலும் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களிலும் வலியுறுத்தினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.