மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழியை 100% நடைமுறைபடுத்துவதை வலியுறுத்தி தெற்கு ரயில்வேயின் மண்டல அலுவல் மொழி அமலாக்கக் குழு கூட்டத்தில் டெமோ செயலி வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு ரயில்வேயின் மண்டல அலுவல் மொழி அமலாக்கக் குழுவின் 169வது கூட்டம் இன்று (23.03.2023) தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் ஸ்ரீ கவுஷல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. அதில் முதன்மை தலைமை மெக்கானிக்கல் இன்ஜினியர் முக்யா ராஜ்பாஷா மற்றும் ஸ்ரீ கவுதம் தத்தா ஆகியோர் ‘இந்தியை நடைமுறைப்படுத்துவதற்கான பயனுள்ள முறைகள்’ குறித்து விளக்கினர். குறிப்பாக ரயில்வே பணியாளர்கள் இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து தெளிவுபடுத்தினர். மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழியை 100% நடைமுறைப்படுத்துவதை வலியுறுத்தி டாக்டர் ஏ.ஸ்ரீனிவாசன் டெமோ செயலியை அறிமுகப்படுத்தினார்.
தெற்கு ரயில்வே பிராந்திய மொழிகளாக தமிழ், மலையாளம் இருக்கும் நிலையில் அலுவல் கூட்டம் நடைபெற்ற அரங்கத்தில் இந்தி ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெமோ செயலி முதல் கட்டமாக பயன்பாட்டில் இருக்கும் என்றும் பின்னர் விரிவுபடுத்தப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் ஸ்ரீ கவுஷல் கிஷோர், ‘உடல்நலம்’ என்ற தலைப்பில் நூலை கூட்டத்தில் வெளியிட்டார். இதன் முதல் பிரதியை மருத்துவத் துறையின் பிரதிநிதி டாக்டர் யு.கே.பெருமாள் (முதன்மை சுகாதார இயக்குநர்) பெற்றுக்கொண்டார். ‘இந்த கையேடு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பயனுள்ள வழிகாட்டியாக இருக்கும்’ என கவுசல் கிசோர் கூறினார்.
தென்னக ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் ஸ்ரீ கவுஷல் கிஷோர் தனது சிறப்புரையில் தெற்கு ரயில்வேயில் அலுவல் மொழி திறம்பட செயல்படுத்தப்படுவதாக திருப்தி தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM