ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை! குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு

Rahul Gandhi Convicted: ராகுல் காந்திக்கு இப்போது பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது “மோடி” என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று கூறியது தொடர்பாக பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏன் எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற ஒரே பெயர்?
தேர்தல் பேரணியில் பேசும் போது “ஏன் எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற ஒரே குடும்பப்பெயர்?” இருக்கிறது எனக் கேள்வி எழுப்பி இருந்தார். ‘மோடி’ என்ற பெயர் தொடர்பான விவகாரம் நீதிமன்ற வாசல் வரை சென்றது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக ராகுல் காந்தி சூரத் சென்றடைந்தார். அதுக்குறித்து வீடியோவும் வெளியானது. சூரத் நீதிமன்றத்தை அடைந்த ராகுல் காந்தி காரில் இருந்து இறங்கி நேராக நீதிமன்றத்தின் உள்ளே சென்றது இந்த வீடியோவில் காணப்பட்டது. 

ராகுல் காந்திக்கு தண்டனை
கோர்ட்டில் தீர்ப்பு கூறப்படும் போது ராகுல் காந்தி நீதிமன்ற அறையில் இருந்தார். அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் மாவட்ட நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குஜராத் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோசி உறுதி செய்துள்ளார்.

பாஜக எம்எல்ஏ வழக்கு
‘மோடி’ பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியதை அடுத்து ராகுல் காந்தி மீது பாஜக எம்எல்ஏவும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் 2021 அக்டோபரில் இந்திய தண்டனைச் சட்டம் 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மக்களவைத் தேர்தலின் போது ராகுல் காந்தி கூறிய விஷயங்கள் ஒட்டுமொத்த மோடி சமூகத்தின் நற்பெயரைக் கெடுத்துவிட்டதாக புகார்தாரர் கூறியிருந்தார். இந்த வழக்கில், மார்ச் 17-ம் தேதி, தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், வரும் 23-ம் தேதி தீர்ப்பை அறிவிப்பதாக அறிவித்தது. இந்நிலையில், இன்று தீர்ப்பு வெளியானது. 

சர்ச்சை பேச்சு
ஏப்ரல் 13, 2019 அன்று கர்நாடகாவில் ஒரு பேரணியில் கலந்துக்கொண்ட ராகுல் காந்தி பேசும் போது, இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் நீரவ் மோடி நாட்டை விட்டு ஓடிவிட்டார். அவரை மேற்கோள்காட்டி ‘எல்லா திருடர்களுக்கும் மோடி பெயர் இருக்கிறது’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். 

ராகுல் காந்தி பேசியது
இந்தியாவில் மிகப்பெரிய திருட்டைச் செய்த நீரவ் மோடிக்கு நமது பிரதமரின் குடும்பப்பெயர் உள்ளது. ஒரு சுவாரஸ்யமானது.. இன்னும் உள்ளன. கிரிக்கெட் உலகின் ஊழல்வாதியின் பெயரும் நமது பிரதமரின் பெயரும் தான். அப்படியென்றால் மோடி என்றால் சரியாக என்ன அர்த்தம்… மோடி என்றால் இந்தியாவின் மிகப் பெரிய க்ரோனி முதலாளிக்கும் பிரதமருக்கும் உள்ள உறவு… ஏன் எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற ஒரே குடும்பப்பெயர்? எனப் பேசியிருந்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.