சென்னை: கொடுங்கையூர் குப்பைக் கிடங்கை ரூ.648.83 கோடி செலவில் மீட்டு பசுமைப் பூங்காவாக மாற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை பெருங்குடி குப்பை கிடங்கு 225.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. கடந்த 36 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டு வருவதால் 34.02 லட்சம் கன மீட்டர் அளவில் பல்வேறு வகையான குடிப்பைகள் குவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குப்பையை, ‘பயோ மைனிங்’ முறையில் 350.65 கோடி ரூபாய் செலவில் அகழ்ந்தெடுத்து, நிலத்தை மாநகராட்சி மீட்டு வருகிறது. இதில், 65 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், 2024 ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையாக பணிகள் முடிவடைய உள்ளது.
இதைதொடர்ந்து, வட சென்னை பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான கொடுங்கையூர் குப்பை கிடங்கில் திடக்கழிவுகளை அகற்றும் பணியில், மாநகராட்சி ஈடுபட உள்ளது. கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு 342.91 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 252 ஏக்கர் பரப்பளவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
தற்போது, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பை இங்கு கொட்டப்பட்டு வருகிறது. இதனால், 66.52 லட்சம் கன மீட்டர் அளவிலான குப்பை, மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. குப்பைக் கழிவுகளால், நிலத்தடி நீரில் ரசாயன தன்மை அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியது.
- முதல் தொகுப்பு – 204.22 கோடி ரூபாய்
- இரண்டாம் தொகுப்பு – 39.90 கோடி ரூபாய்
- மூன்றாம் தொகுப்பு – 109.97 கோடி ரூபாய்
- நான்காம் தொகுப்பு – 42.50 கோடி ரூபாய்
- ஐந்தாம் தொகுப்பு – 176.78 கோடி ரூபாய்
- ஆறாம் தொகுப்பு – 68.04 கோடி ரூபாய்
இதற்கு தீர்வு காணும் வகையில், அண்ணா பல்கலை, ஐ.ஐ.டி., வல்லுநர்கள் ஆலோசனைப்படி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கை, ‘பயோ மைனிங்’ முறையில் அகழ்ந்தெடுத்து மீட்கும் பணிக்கு, ஆறு தொகுப்புகளாக மாநகராட்சி ‘டெண்டர்’ அறிவித்துள்ளது.
இதற்காக, மத்திய அரசு நிதியாக 160 கோடி ரூபாய், மாநில அரசு 102 கோடி ரூபாய், சென்னை மாநகராட்சி 378 கோடி ரூபாய் என 648.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 251.9 ஏக்கர் நிலம் மீட்கப்பட உள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் மகேசன் கூறியதாவது:
“பெருங்குடி குப்பைக் கிடங்கு நிலம் அடுத்த ஆண்டுக்குள் மீட்கப்பட்டு, அதில் 100 ஏக்கரில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும். மீதமுள்ள இடங்களில் குப்பையை மறுசுழற்சி செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும். அதேபோல், கொடுங்கையூர் குப்பை கிடங்கு, அதிகபட்சம் 2026-க்குள் மீட்கப்பட்டு, அங்கும் பசுமைப் பூங்கா, குப்பை கையாள்வதற்கான வசதிகள் அமைக்கப்படும். இந்த இரண்டு குப்பைக் கிடங்குகளும் மீட்கப்பட்ட பின், குப்பைக் கிடங்கு இல்லாத மாநகராக சென்னை இருக்கும்” என்று அவர் கூறினார்.