லண்டனில் உள்ள இந்திய தூதரகரத்தின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்ததற்கு பதில் அளிக்கும் வகையில், டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகம் மற்றும் பிரிட்டன் தூதரின் இல்லத்துக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகளை மத்திய அரசு அகற்றியது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் ஆதரவாளர்கள் திடீரென நுழைந்தனர். இந்திய தூதரக கட்டிடத்தின் முன்புறம் உள்ள கம்பத்தில் இருந்து மூவர்ணக் கொடியை கீழிறக்கினர். மேலும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் கொடியை ஏற்ற முயன்றனர். அதற்குள் தகவல் அறிந்து வந்த லண்டன் போலீஸார் அவர்களை அகற்றினர். இந்தச் சம்பவத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
மத்திய அரசு கண்டனம்: அத்துடன், டெல்லியில் உள்ளபிரிட்டன் துணை தூதர் கிறிஸ்டினா ஸ்காட்டை அழைத்து, லண்டன் தூதரகத்துக்கு வழங்கப்படும் பாதுகாப்பில் அலட்சியம் காட்டியதற்கு கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும்படியும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
வீரர்கள் குறைப்பு இல்லை: இந்நிலையில், டெல்லியின் சாணக்கியபுரி சாந்திபாத் பகுதியில் உள்ள பிரிட்டன் தூதரகம் மற்றும் டெல்லியின் ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எல்லீஸ் இல்லத்துக்கு வெளியில் பாதுகாப்புக்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மத்திய அரசு நேற்று அகற்றியது. எனினும், இரண்டு இடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கை எதுவும் குறைக்கப்படவில்லை.
இதுகுறித்து பிரிட்டன் தூதரகசெய்தித் தொடர்பாளர் கூறும்போது, ‘‘பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை’’ என்று கூறியுள்ளார். அதேபோல் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் எந்தக் கருத்தும் வெளியிடவில்லை.
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்குள் நுழையும் அளவுக்கு அங்கு போலீஸார் அலட்சியமாக செயல்பட்டுள்ளது குறித்து மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் உயரதிகாரிகளுடன் ஆய்வு செய்தது. அதன்பின், லண்டன் சம்பவத்துக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.