திருத்தனி அருகே வனப்பகுதி சாலையோரம் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால், வன விலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சிக்குட்பட்டது பி.சி.என்.கண்டிகை கிராமம். இந்த கிராமத்திற்கு திருத்தணி-மாம்பாக்கசத்திரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து வனப்பகுதி சாலை வழியாக மக்கள் நடந்தும், வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். இதுதவிர இச்சாலை வழியாக அரசு பஸ்கள் குருவராஜப்பேட்டை, மின்னல் மற்றும் அன்வர்த்திகான்பேட்டை வரை செல்கிறது.
இந்நிலையில் திருத்தணி பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள், வனப்பகுதி சாலையோரம் தொடர்ந்து கொட்டப்பட்டுவரும் அவலநிலை தொடர்கிறது. மருத்துவ கழிவுகள் மற்றும் நகராட்சி குப்பைகள் கொட்டக்கூடாது என ஊராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரித்தும், இரவு நேரத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டிவிட்டு செல்கின்றனர்.
ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்கள், வெடிமருந்துகளை உண்டு யானை முதலிய உயிரிழந்துவரும் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. இந்நிலையில் இங்கு கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை, வனவிலங்குகள் உட்கொள்ளும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மருத்துவ கழிவுகள் உள்ளதை பார்த்து கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் மருத்துவ கழிவுகளை உடனடியாக அகற்றி, கழிவுகளை கொட்டி செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM