பெண்களுக்கு வரதட்சணை கொடுத்தபின்னர் குடும்ப சொத்தில் உரிமை உண்டா என்பது குறித்து மும்பை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
கோவாவை சேர்ந்த தம்பதிக்கு நான்கு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள். அனைவர்க்கும் திருமணம் முடிந்துவிட்டது. இந்நிலையில், தந்தை இறந்த பின்னர் குடும்பத்திற்குச் சொந்தமான கடை சகோதரிகளுக்கு தெரியாமல் சகோதரர் பெயருக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து சகோதரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நான்கு சகோதரிகளுக்கும் திருமணத்தின் போது போதுமான வரதட்சணை வழங்கப்பட்டது என சகோதரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையிலும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சகோதரிகள் சார்பில் மும்பை உயர் நீதிமன்ற கோவா கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பத்திரத்தை மாற்றி 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தாலும் கூட, அது தெரிந்த 6 வாரத்துக்குள் சகோதரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அனைவரது சம்மதத்திற்கு பிறகே சொத்துகளைக் குறிப்பிட்ட ஒருவருக்கு தரமுடியும். பிற பிள்ளைகளின் சம்மதம் இல்லாமல் சொத்தை குறிப்பிட்ட பிள்ளைகளுக்கு கொடுத்தது தவறு.
எனவே சொத்து பகிர்வை ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மகள்களுக்கு வரதட்சணை வழங்கப்பட்டதாகவே இருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு குடும்பச் சொத்தில் மகள்களுக்கு எப்போதும் உரிமை இருக்கிறது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
newstm.in