புது டெல்லி: ‘AIS for Taxpayers’ எனும் மொபைல் போன் செயலியை இந்திய வருமான வரித் துறை அறிமுகம் செய்துள்ளது. வருடாந்திர தகவல் அறிக்கை (ஏஐஎஸ்) / வரி செலுத்துவோர் தகவல் விவரம் (டிஐஎஸ்) போன்ற விவரங்களை வரி செலுத்துவோர் இதில் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தரப்புகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த செயலியில் வரி செலுத்துவோருக்கு விரிவான தகவல் வழங்கப்படுவதாக தெரிகிறது.
வரி செலுத்துவோர் தங்கள் டிடிஎஸ்/டிசிஎஸ், வட்டி, டிவிடெண்ட், பங்கு பரிவர்த்தனைகள், வரி செலுத்துதல் மற்றும் வருமான வரியை திரும்பப் பெறுதல் (டேக்ஸ் ரிட்டர்ன்) தொடர்பான தகவல்களை எளிதாக இந்த செயலியின் மூலம் அறிந்து கொள்ளலாம் என வருமான வரித்து றை தெரிவித்துள்ளது. வரி செலுத்துவோருக்கு மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்கும் நோக்கில் எளிய முறையில் இந்த செயலி வழங்கும் என்றும் தெரிகிறது. இந்தச் செயலியை பயன்படுத்துவது எப்படி?
- ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன் பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தலாம். AIS for Taxpayers செயலியை ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
- பின்னர் அதில் பயனர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- இதற்கு பான் கார்டு எண்ணை பயனர்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிட்டு பயனர்கள் இதில் இணையலாம்.
- தொடர்ந்து பயனர்கள் 4 டிஜிட் கொண்ட ரகசிய எண்ணை உள்ளிட வேண்டும். அதை செய்தால் இந்த செயலியை பயனர்கள் பயன்படுத்தலாம். இதனை ஏஐஎஸ் வலைதளத்திலும் பயன்படுத்த முடியும்.
செயலியின் அம்சங்கள் என்ன?
- பொதுவான விவரங்கள் என சொல்லப்படும் பயனர் பெயர் மற்றும் பான் கார்டு விவரங்களை பயனர்கள் பெறலாம்.
- வருடாந்திர தகவல் அறிக்கை (ஏஐஎஸ்) / வரி செலுத்துவோர் தகவல் விவரத்தை (டிஐஎஸ்) இதில் பெறலாம். அதை டவுன்லோடும் செய்யலாம்.
- டிடிஎஸ் குறித்த கருத்துகளை வரி செலுத்துவோர் இதன் மூலம் வழங்கலாம் என தெரிகிறது. அதை PDF கோப்பாக ஒருங்கிணைக்கவும் முடியும் என தெரிகிறது.
- இந்த செயலியில் சாட்பாட் மூலம் பயனர்கள் தங்களது சந்தேகங்களுக்கு பதில் பெறலாம்.
ITD has launched a mobile app ‘AIS for Taxpayers’ to enable taxpayers to view their info as available in Annual Information Statement(AIS)/Tax Information Summary(TIS).
This will provide enhanced taxpayer service & ease of compliance.(1/2)Press Release:https://t.co/WujCqyYQSe pic.twitter.com/Q6VaC2L2S2
— Income Tax India (@IncomeTaxIndia) March 22, 2023