தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா உடன்குடி புதுக்காலனியைச் சேர்ந்தவர் சுடலைமாடன். இவர், உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். அத்துடன் கடந்த 2 ஆண்டாக தூய்மைப்பணி மேற்பார்வையாளராகவும் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். ஆனால், பேரூராட்சியின் தற்போதைய தலைவர் ஹீமைரா ரமீஷ் பாத்திமாவின் மாமியாரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான ஆயிஷா கல்லாசியின் ஆதிக்கம்தான் இங்கு தலை தூக்கியிருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. அதனால், ஆயிஷா கல்லாசி, நிர்வாகத்தில் தலையீடு செய்து பதவி உயர்வு அளிக்க ரூ.5 லட்சம் லஞ்சமாக பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
“என்னால் பணம் என்னால் தர முடியாது” என சுடலைமாடன் மறுத்திருக்கிறார். இதனால், ஆயிஷா கல்லாசி ”பணம் தர முடியவில்லை என்றால் உனக்கு எதுக்கு மேஸ்திரி வேலை? குப்பையை அள்ளுகிற வேலையை பாரு. பதவி உயர்வுன்னு சொல்லிட்டு எங்கிட்ட வந்தா உன்னை தொலைச்சுடுவேன்” எனச்சொல்லியும் சாதியைக் குறிப்பிட்டும் மிரட்டியிருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது. இதனால், மனம் உடைந்த சுடலைமாடன், கடந்த 17-ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 5 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஆயிஷா கல்லாசி, செயல் அலுவலர் பாபு ஆகியோர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இருவரையும் கைதுசெய்யக்கோரியும் ஹீமைரா ரமீஷ் பாத்திமா மீது கொலை வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என சுடலைமாடனின் குடும்பத்தினர், தூய்மை பணியாளர்கள் உடலை வாங்க மறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அத்துடன் சுடலைமாடனின் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரின் மகளுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.