சென்னை சாலிகிராமம், குமரன் காலனி இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (65). இவர் கோடம்பாக்கம் பகுதியில் கலர் லேப் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், சந்தோஷ் குமார் அண்மையில் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், “நான் கோடம்பாக்கம் பகுதியில் கலர் லேப் நடத்தி வருகிறேன். என்னிடம் கோவையைச் சேர்ந்த சத்திய சாய் என்பவர் கணக்காளராகப் பணியாற்றி வந்தார். அந்த நபர் வாடிக்கையாளர்களிடமிருந்து கூகுள்-பே மூலமாக கடைக்குச் சேர வேண்டிய பணத்தை, தன்னுடைய வங்கிக் கணக்குக்கு அனுப்பி வந்திருந்தார்.
சிறுக சிறுக இப்படியாக ரூ.15 லட்சத்தை அந்த நபர் கையாடல் செய்திருக்கிறார். இது என்னுடைய கவனத்துக்குத் தெரியவராமல், பொய் கணக்கு எழுதி வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் இந்த ஏமாற்று வேலை குறித்து எனக்குத் தெரியவந்தது. அதையடுத்து, நான் விசாரிக்கத் தொடங்கினேன். இந்த நிலையில், அதை அறிந்துகொண்ட அந்த நபர், கடந்த இரண்டு மாதங்களாக வேலைக்கு வராமல், தலைமறைவாகிவிட்டார். எனவே, அந்த நபர்மீது நடவடிக்கை மேற்கொண்டு, என்னுடைய பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரின் புகாரைப் பெற்றுக்கொண்ட கோடம்பாக்கம் போலீஸார், வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கினர். இந்த நிலையில், அண்மையில் தலைமறைவாக இருந்த சத்திய சாய் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கலர் லேப் வாடிக்கையாளர்களிடமிருந்து கூகுள்-பே மூலமாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, உரிமையாளரை ஏமாற்றிய சத்திய சாய், அந்தப் பணத்தை தன்பாலின உறவுக்குச் செலவழித்து வந்திருக்கிறார். தன்பாலின ஈர்ப்பாளரான சத்திய சாய், இணையத்தில் தேடி `தன்பாலின உறவு’ செயலிகள் மூலமாக, தன்பாலின ஈர்ப்பில் நாட்டம் கொண்ட பலரைப் பணம் கொடுத்து தனிமைக்கு அழைத்திருக்கிறார்.
அதிகபட்சமாக நாளொன்றுக்கு இதற்காக 15,000 ரூபாய் வரை செலவிட்டிருக்கிறார். மேலும், இதற்காக ஆடம்பர விடுதிகளுக்குச் செல்லும் சத்திய சாய், தான் டிப்ஸாக மட்டுமே ரூ.5,000 வரையில் கொடுத்ததாக போலீஸாரிடம் விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.
அவரைக் கைதுசெய்த போலீஸார், அவரிடமிருந்து பணத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.