ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே குடிநீர், கழிவறை வசதி கேட்டு அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை கீழ்பாதி ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சுமார் 140 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 8 பேர் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளி மாணவர்களுக்கு சரியான குடிநீர் மற்றும் கழிவறை வசதி இல்லை என நீண்ட நாட்களாக தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்து வந்துள்ளனர். இருப்பினும் குறைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் இன்று காலை பள்ளி எதிரே உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வீரமணி, ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தற்காலிகமாக மாணவர் விடுதியில் இருந்து குடிநீர் வசதி செய்து தருவதாகவும், அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுப்பதாகவும் உறுதி அளித்தனர். அதன்பேரில் மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.