கடல் வழி சரக்கு போக்குவரத்தை மேற்கொண்டு வரும் தைவானைச் சேர்ந்த எவர்கிரீன் (Evergreen) என்ற நிறுவனம், தனது நிறுவனத்தில் பணிபுரியும் 3,100 ஊழியர்களுக்கு ஐந்து வருடச் சம்பளத்தை போனஸாக கொடுத்துள்ளது.
சுயஸ் கால்வாய் வழியாக கன்டெய்னர் படகுகளை இயக்கி வருகிறது எவர்கிரீன் நிறுவனம். இங்கு பணிபுரிபவர்களுக்கு ஆண்டு வருமானமாக 44,745 முதல் 171,154 அமெரிக்க டாலர்கள் வரை வழங்கப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் 37,00,807 முதல் 1,41,55,950 வரை வருமானமாகப் பெறுகின்றனர்.
2022 நிதியாண்டு முடிவடையும் நிலையில், இந்த நிறுவனம் சுமார் 16.25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டியுள்ளது. இது நிறுவனத்தின் லாபத்தில் 39.82சதவிகித முன்னேற்றம்.
இவ்வளவு பெரிய லாபத்தை அடைவதற்கான முக்கிய காரணம், தொற்று நோய் சமயங்களில் நுகர்வோர் பொருட்களுக்கான தேவை அதிகரித்ததே என்று கூறப்படுகிறது.
ஊழியர்களுக்கு 10 முதல் 11 மாதங்களுக்கான ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஐந்து வருட சம்பளத்தை போனஸாக பெற்றிருக்கின்றனர். இது குறித்து அந்நிறுவனம், “தனிநபர் வேலை செய்யும் விதத்தின் அடிப்படையிலேயே இந்த போனஸ் வழங்கப்பட்டுள்ளது” என அறிவித்துள்ளது.
ஐந்து வருடச் சம்பளத்தை இந்த நிறுவனம் போனஸாக ஊழியர்களுக்கு வழங்கிய செய்தி, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.