நிலத்தில் குழிதோண்டும் நிறுவனங்களுக்கும், நிலத்தடி புதை பயன்பாடு பொருட்கள் உரிமையாளருக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு தொடர்பை மேம்படுத்தும் வகையில் ‘Call Before u Dig’ (தோண்டும் முன் அழைக்கவும்) என்ற செயலியை புதன்கிழமை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி. இதனால் குழி பறிக்கும்போது நிலத்தடி புதை பயன்பாடு உரிமையாளர்கள் தங்கள் பொருட்கள் சேதமடைவதை தடுக்க முடியும்.
இந்த செயலின் பயன்பாடுகள் என்னென்ன?
ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் போன்ற நிலத்தடி சொத்துக்கள் சேதமடைவதை தடுக்க Call Before u Dig (CBuD) என்ற மொபைல் செயலியானது தொலைத்தொடர்பு துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னறிவிக்கப்படாத குழி தோண்டுதலால் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ரூ. 3000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக பத்திரிகை தகவல் பணியகம் தெரிவித்திருந்தது. சாலை, தொலைத்தொடர்பு, தண்ணீர், கேஸ் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஏற்படும் இடையூறுகளால் குடிமக்களுக்கு ஏற்படக்கூடிய பொருளாதார நஷ்டத்தை இந்த செயலி குறைக்க உதவும்.
இந்த செயலி எப்படி செயல்படுகிறது?
CBuD என்ற செயலியானது குழி தோண்டும் நிறுவனங்கள், நிலத்தடி புதைபொருட்களின் உரிமையாளர்களை குறுஞ்செய்தி / இ-மெயில் மற்றும் click-to-call போன்ற வசதிகள் மூலம் முன்கூட்டியே தொடர்புகொள்ள வழிவகை செய்கிறது. இதனால் நிலத்தடி பொருட்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் குழி தோண்டும் முன்பு ஏற்கனவே அங்கு பயன்பாட்டில் உள்ள நிலத்தடி பொருட்கள் குறித்து விசாரிக்க நிறுவனங்களுக்கு தொடர்பு வசதியை ஏற்படுத்தி தருகிறது. இதன்மூலம், நிலத்தடி பொருட்களின் உரிமையாளர்களும் தங்கள் பகுதியில் நடைபெறவிருக்கும் வேலை குறித்து முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.
CBuD செயலியுடன், பாரதத்தின் 6G விஷன் ஆவணத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும், புதிய சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் (ITU) பகுதி அலுவலகம் மற்றும் கண்டுபிடிப்பு மையத்தையும் திறந்து வைத்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM