சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவின் நகைகள் திருடப்பட்ட சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் வெளிச்சத்துக்கு வந்தது. இது குறித்து காவல் துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதோடு, சந்தேக நபர்கள் பற்றிய தகவலும் அவர்களிடம் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறை சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றது. இதில் ஈஸ்வரி என்பவரின் பெயர் வெகுவாக அடிபட்டு, அவரைப் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த அங்கமுத்து என்பவரின் மனைவி தான் ஈஸ்வரி. அங்கமுத்து பெரிதாக எந்த வேலைக்கும் செல்லவில்லை. 2006 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ஈஸ்வரி வேலைக்கு சேர்ந்தார். அங்கு நல்ல பெண் போல நடித்து ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவிடம் நெருக்கமாகி விட்டார். பின்னர் நடிகர் தனுசிடமும் அன்பை பெற்றிருக்கிறார்.
இதனால் வேலைக்காரி என்பதை தாண்டி நகை வைக்கும் லாக்கர் பெட்டியின் சாவி இருக்கும் இடம்கூட தெரியும் அளவுக்கு, ஈஸ்வரி ஐஸ்வர்யாவின் நம்பிக்கைக்குரியவராக வலம் வந்துள்ளார்.
ரஜினிகாந்த் வீட்டில் வேலைக்கு போன பின்னர் ஈஸ்வரி, தனது கணவருக்கு பெரிய அளவில் காய்கறி கடை வைத்து கொடுத்திருக்கிறார். தனது மூத்த மகளையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இறுதியாக பெரிய பங்களா வாங்கி இருக்கிறார்கள். இதனால் தான் ஈஸ்வரி மீது சந்தேக வலை பெரிய அளவில் நீண்டது.
கார் டிரைவர் வெங்கடேசனுக்கு திருட்டு விவகாரம் தெரிய வரவே அவரையும் சரி கட்டியிருக்கிறார் ஈஸ்வரி. ரஜினி குடும்பத்தினரின் நம்பிக்கையை சீர்குலைத்த ஈஸ்வரி தனக்கு வேண்டிய எல்லாவற்றையும் நகைகளை திருடி சாதித்து கொண்டிருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ஏற்கனவே விலை உயர்ந்த வைர மோதிரம் திருட்டு போய், பின்னர் அது மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேலைக்கார பெண்ணே இவ்வளவு பெரிய திருட்டில் ஈடுபட்டு ரஜினிக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈஸ்வரி ஐஸ்வர்யாவோடு நிற்காமல், நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் வீடுகளிலும் கைவரிசை காட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளதால். தொடர்ந்து விசாரனை செய்து வருகிறார்கள். ஈஸ்வரியும், வெங்கடேசனும் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளனர். எனினும் ஈஸ்வரியின் கணவர் அங்கமுத்து தொடர்ந்து விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்.
இதற்கிடையில் நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருடப்பட்டதாக கூறப்பட்டதை விட அதிக அளவில் நகைகள் மீட்கப்பட்டது குறித்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.