கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாஜக சட்டமன்ற உறுப்பினரான புர்னேஷ் மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
இதனையடுத்து ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த கிரிமினல் வழக்கின் அடிப்படையில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து ராகுல் காந்தி தகுதி நீக்க நடவடிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் முகப்புப் படம் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘அஞ்சாதே’ என்ற வாசகத்துடன் ராகுல் காந்தியின் புகைப்படம் முகப்புப் படமாக வைக்கப்பட்டுள்ளது.